சோழ மண்டலம் நெல்லுக்கும், சொல்லுக்கும் களஞ்சியம்

 சோழ மண்டலம் நெல்லுக்கு மட்டுமல்லாமல், சொல்லுக்கும் களஞ்சியமாகத் திகழ்கிறது என தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர் பெருமிதம் தெரிவித்தார்.


 சோழ மண்டலம் நெல்லுக்கு மட்டுமல்லாமல், சொல்லுக்கும் களஞ்சியமாகத் திகழ்கிறது என தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர் பெருமிதம் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மற்றும் தமிழக அரசின்  செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்ககம் இணைந்து நடத்திய அகராதியியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலர் கே. கார்த்திகேயன் தலைமை வகித்தார். முதல்வர் ஆர். நாகராஜன், மயிலாடுதுறை திருக்குறள் பேரவைத் தலைவர் சி.சிவசங்கரன், உலகத் தமிழ்க் கழக நாகை மாவட்ட அமைப்பாளர் வாய்மை இளஞ்சேரன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். சிறப்பு விருந்தினராக தஞ்சை தமிழப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியன் பங்கேற்றுப் பேசியது:
ஒரு மொழியில் ஒருவருக்கு 5 ஆயிரம் முதல் 7ஆயிரம் வரையிலான சொற்கள் தெரிந்திருந்தால் அவரால் அந்த மொழியை திறமையாக கையாண்டு பல சாதனைகளை செய்ய முடியும்.  நமது தமிழ்மொழியில் உள்ள பல வேர்சொற்களை அறிந்து, அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது அவசியமானதாகும். தமிழில் பேசும்போது பிறமொழி சொற்கள் கலப்பு இல்லாமல் பேசிப் பழக வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்கள் சிந்தனை மற்றும் எண்ணங்களை மாற்றி புதிய சொற்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள் என்றார் அவர். 
தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர் தங்க. காமராசு பேசியது: சோழ மண்டலம் நெல், சொல் இரண்டிற்கும் களஞ்சியமாகத் திகழ்கிறது. சோழ மண்டலத்தைச் சேர்ந்த புலவர்கள்தான் அதிகமான சொற்களை தமிழ் மொழிக்கு கொடுத்துள்ளனர். மாணவர்களை நெறிப்படுத்தும் கடமை தமிழ் மொழிக்கு உண்டு. மொழிகளில் உள்ள சொல் வளம்தான் எந்த ஒரு மொழியையும் அழியாமல் பாதுகாக்கும்.
இதுவரை தமிழில் சுமார் 12 ஆயிரம் புதிய கலைச்சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரியில்தான் வேறு எந்தக் கல்லூரியிலும் இல்லாத அளவுக்கு 450 தரமான கலைச் சொற்களை, பேராசிரியர்கள் உதவியுடன் மாணவர்கள் படைத்துள்ளனர் என்றார் அவர். ஏவிசி கல்லூரியின் தமிழாய்வுத் துறை முன்னாள் தலைவர் துரை. குணசேகரன் பாவாணரின் சொற்பிறப்பியல் கோட்பாடுகள் என்ற தலைப்பிலும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மொழி பெயர்ப்புத் துறை பேராசிரியர் சா. விஜயராஜேஸ்வரி சொல்லுக தமிழ் கலைச்சொற்கள் என்ற தலைப்பிலும் பேசினர். 
இதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா எழுதிய ஓர் இரவு என்ற நூலை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர்
கோ. பாலசுப்பிரமணியன் வெளியிட, ஏவிசி கல்லூரியின் தமிழாய்வுத் துறை முன்னாள் தலைவர் சா. கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார். தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் சு. தமிழ்வேலு வரவேற்றார். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்கக பதிப்பாசிரியர் முனைவர் தி. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசியர்கள், அலுவலக உதவியாளர் பாலமுருகன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com