அழகான கட்டடம்; அக்கறை இல்லாத சேவை: ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவலம்

நாகை மாவட்டம்,  ஆக்கூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம்  அழகாக இருந்தாலும், மருத்துவச் சேவையில்
அழகான கட்டடம்; அக்கறை இல்லாத சேவை: ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவலம்

நாகை மாவட்டம்,  ஆக்கூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம்  அழகாக இருந்தாலும், மருத்துவச் சேவையில் அக்கறை இல்லாத நிலையால் இப்பகுதி மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே, மருத்துவச் சேவையை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் சின்னங்குடி, காலமாநல்லூர், மருதம்பள்ளம், கிடங்கல், மாமாகுடி, ஆக்கூர், மடப்புரம், காலகஸ்திநாதபுரம், மாத்தூர், முக்கரும்பூர், அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர். உள் நோயாளிகளுக்குப் படுக்கை வசதிகள், பிரசவ அறை, சித்த மருத்துவப் பிரிவு, ஊசி போடும் அறைகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்கள், உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர். மருத்துவர் பற்றாக்குறையால் புற நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் அவசர சிகிச்சை பெற வருபவர்கள் மயிலாடுதுறை, காரைக்கால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. மேலும், பிரசவ வார்டில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால்  அவ்வப்போது ஏற்படும் மின் தடையால் நோயாளிகள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.  
இங்கு, பல் மருத்துவத்துக்கான அனைத்து கருவிகளும் இருந்தபோதிலும், பல் மருத்துவர் இல்லாத நிலை உள்ளது. அத்துடன், சிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு இருக்கை வசதிகள் போதுமானதாக இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் நோயாளிகள் மட்டுமின்றி மருத்துவப் பணியாளர்களும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்  மு. ஷாஜகான் கூறியது:
ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் புதிய கட்டடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப்பட்டது. தொடர்ந்து, ஓராண்டு மட்டுமே மருத்துவர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். பின்னர், படிபடியாக தொய்வு நிலை ஏற்பட்டது. தற்போது,  பல் மருத்துவர், மூக்கு, தொண்டை, காது மருத்துவர் இல்லை.
இரவு நேரங்களில் சரியான முறையில் மருத்துவர் வருவதில்லை. நோயாளிகளுக்கு மருத்துவம்  அனைத்தையும் செவிலியர்தான் பார்த்துக்கொள்கின்றனர். நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கும்போது, அதை எந்த வேளையில் எத்தனை மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் எனக் கூறுவதில்லை. இதனால், பாமர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால், மாத்திரைகளை கையில் வழங்காமல், கவரில் போட்டு, அதை உட்கொள்ள வேண்டிய வேளைகளை கவரில் எழுதிக் கொடுக்க வேண்டும். போதிய மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து,  ஆக்கூர் பொது நலச் சேவை சங்கத் தலைவர்  செல்வ அரசு கூறியது:
ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால், உள்நோயாளிகள் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. ஜெனரேட்டர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மட்டும்  பயன்படுத்தப்படுகிறது. உள்நோயாளிகள், கர்ப்பிணிகள் சிகிச்சை பெறும் வார்டுகளுக்கு ஜெனரேட்டர் வசதி இல்லாததால் அடிக்கடி ஏற்படும் மின் தடையின்போது, சிரமத்துக்கு ஆளாகின்றனர். அத்துடன், பொதுக் கழிப்பிட வசதிகள் இல்லாததால் பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால், மழைக்காலங்களில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த குறைபாடுகளை களைவதுடன், கூடுதல் மருத்துவரை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தைப் சுகாதாரத் துறையினர் பார்வையிட்டு, நோயாளிகளின் நலன் கருதி விரைவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின்
எதிர்பார்ப்பாக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com