சீர்காழியில் சிறுபாலங்கள் கட்டும் பணி தொடக்கம்: போக்குவரத்து மாற்றம்

சீர்காழி நகர் பகுதியில் மழைநீர் சாலையில் தேங்காமல் எளிதில் வடியும் வகையில், இரு இடங்களில் சிறுபாலங்கள்

சீர்காழி நகர் பகுதியில் மழைநீர் சாலையில் தேங்காமல் எளிதில் வடியும் வகையில், இரு இடங்களில் சிறுபாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிடாரி வடக்கு வீதியில் பாலம் கட்டும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பிடாரி வடக்கு வீதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கிபோக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் மழைநீர் எளிதில் வடியும் வகையில், பிடாரி வடக்குவீதியில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சிறுபாலம் (பாக்ஸ் கல்வெர்ட்) கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதேபோல், சீர்காழி ஈசானியத் தெருவிலும் மழைநீர் விரைவாக வடியும் வகையில் சிறுபாலம் கட்டவும் முடிவு செய்யப்பட்டு, இரு பாலங்களுக்கும் ரூ.22 லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, பிடாரி வடக்கு வீதியில் முதல்கட்டமாக சாலையின் குறுக்கே  சிறுபாலம்  கட்டும் பணி தொடங்கியது. 
இதற்காக சாலையின் குறுக்கே ஹிட்டாச்சி இயந்திரம் கொண்டு பள்ளம் வெட்டப்பட்டு, கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்ட பொறியாளர் சூரியமூர்த்தி, உதவிபொறியாளர் செந்தில்குமார்  ஆகியோர் ஆய்வு  செய்தனர்.  அப்போது பணிகள் இரவு, பகலாக நடத்தி முடிக்கப்பட்டு விரைவில் போக்குவரத்து பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுபாலம் கட்டும் பணியால் பிடாரி வடக்கு வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சீர்காழி பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் கடைவீதி, மணிக்கூண்டு, தேர் வடக்கு வீதி வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைந்து, அங்கிருந்து வழக்கமான பாதையில் செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com