நாகூரில் முழு கடையடைப்புப் போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாகை மாவட்டம், நாகூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் அமைப்புகள் சார்பில் நாகூரில் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. 

நாகை மாவட்டம், நாகூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் அமைப்புகள் சார்பில் நாகூரில் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. 
கழிவு நீர் கலக்காத பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.  காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டும். சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும்.  
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாகூர் தர்கா அலங்கார வாசலில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகூர் வர்த்தகர் சங்கம், நாகூர் வணிகர் சங்கம், நாகூர் பாலத்தடி வர்த்தகர் சங்கம் ஆகிய அமைப்புகள் விடுத்த அழைப்பின் பேரில் இந்தக் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. 
நாகூர் பெரிய கடைத்தெரு, நியூ பஜார் லைன், பாலத்தடி, நாகூர் பிரதான சாலை என நாகூரின் பிரதான பகுதிகளில் கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.  தேநீரகங்கள், உணவகங்கள், மளிகைக் கடைகள், துணிக் கடைகள் என சுமார் 600 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஓரிரு மருந்தகங்கள் மட்டுமே இயங்கின. 
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபெற்ற இந்தக் கடையடைப்புப் போராட்டம் காரணமாக, நாகூர் தர்கா மற்றும் நாகூரின் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. 
தர்காவுக்கான பக்தர்களின் வருகையும் மிகவும் குறைவாகவே இருந்தது.  நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com