பயோ மெட்ரிக் வருகைப் பதிவு: உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்கக் கோரிக்கை

ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய, பயோ மெட்ரிக் கருவி பொருத்துவதற்கு ஏதுவாக அனைத்து உதவி பெறும்

ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய, பயோ மெட்ரிக் கருவி பொருத்துவதற்கு ஏதுவாக அனைத்து உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் விடுபாடின்றி மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்தச் சங்கத்தின் நாகை வட்டாரச் செயலாளர் கி. பாலசண்முகம், கல்வித் துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: 
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை என்ற அவப்பெயரைப் போக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரக்கிளை வரவேற்கிறது.
நாகை மாவட்ட மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இந்தக் கல்வி ஆண்டு  ஜூன் மாதம் முதல் இந்த முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் நாகை மாவட்டத்தில் உள்ள 240 நடுநிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதில், 180 நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவி பொருத்துவதற்கு ஏதுவாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, தற்போது அந்தப் பள்ளிகளுக்கு பயோ மெட்ரிக் கருவிகள் வழங்கப்படவுள்ளன.
மீதமுள்ள 60 உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இதுவரை மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை.  இந்த நிலையில், அந்தப் பள்ளிகளும் உடனடியாக பயோமெட்ரிக் கருவிகளைப் பெற்றுப் பொருத்த வேண்டும் என வட்டாரக் கல்வி அலுவலர்கள் நெருக்கடி அளித்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது.  
திட்டத்தின் நோக்கம் உரிய முறையில் நிறைவேறும் வகையில் அனைத்து உதவி பெறும் பள்ளிகளுக்கும் உடனடியாக மடிக்கணினிகள் வழங்கிடவும், அதன் பின்னர் அந்தப் பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவியைப் பொருத்தவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com