விவசாயிகள் குறைதீர் கூட்டம்: பயிர்க் காப்பீடு முறைகேடுகளைக் கண்டறியும் விசாரணைக்குக் கோரிக்கை

கடந்த மூன்று ஆண்டுகளாக பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்கலில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டறிய விசராணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


கடந்த மூன்று ஆண்டுகளாக பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்கலில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டறிய விசராணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் தலைமை வகித்தார். நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம். செல்வராஜ், கீழ்வேளூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் உ. மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி, வேளாண் இணை இயக்குநர் பன்னீர்செல்வம், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பொ. நடுக்காட்டுராஜா மற்றும் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது : 
சா.வீ. ராமகிருஷ்ணன் : கடைமடை பகுதிகளின் சம்பா சாகுபடி பணித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீர் திறக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றப்பட்ட பின்னர், முறைவைத்து தண்ணீர் திறந்து, கடைமடையின் பாசன நீர் தேவையை உறுதி செய்ய வேண்டும். 
எம்.எஸ். முஜீபுஷரீக் : விவசாயிகளின் நலன் கருதி வேட்டைக்காரனிருப்புப் பகுதியில் கால்நடைப் பட்டியும், வேளாண் விரிவாக்க மையமும் அமைக்க வேண்டும். 
மணியன் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு, இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்க வேண்டும். நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு விதை, இடுபொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். சிறுதானியப் பயிர்கள் சாகுபடி குறித்து வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். 
வி. தனபாலன் : கடந்த 3 ஆண்டுகளாக பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருகின்றன. பிரீமியம் செலுத்தியவர்களில் சுமார் 12 ஆயிரம் பேர் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்படவில்லை. ஒவ்வொரு வங்கியிலும் நூற்றுக்கணக்கான இரட்டைப் பதிவுகள் என பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதுகுறித்து பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு மூலம் விசராணை மேற்கொள்ள வேண்டும்.
குரு. கோபிகணேசன் : கடந்த 2016-17-ஆம் ஆண்டில் நாகை மாவட்டத்துக்குப் பயிர்க் காப்பீடு இழப்பீடாக ரூ. 340 கோடி கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்தத் தொகை ரூ. 360 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாள்களில் ரூ. 420 கோடி என அறிவிக்கப்பட்டது. உண்மையாக கிடைக்கப் பெற்ற இழப்பீடு தொகை குறித்து இதுவரை மத்திய கூட்டுறவு வங்கியும், பயிர்க் காப்பீடு நிறுவனமும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்தத் தொகையில் சுமார் ரூ. 50 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
இதேபோல 2018-19-ஆம் ஆண்டுக்கான காப்பீடு தொகை அறிவிப்புகளிலும் வெளிப்படைத் தன்மையில்லை. எனவே, இதுகுறித்த விசாரணைக்கு, ஒரு விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அல்லது பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். 
கோரிக்கை மனு...
கூட்டத்தினிடையே, நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம். செல்வராஜ், கீழ்வேளூர் தொகுதி சட்டப்  பேரவை உறுப்பினர் உ. மதிவாணன், திமுக மாவட்டப் பொறுப்பாளர் என். கெளதமன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். 
அந்த மனுவில்,  2018-19-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீடு அறிவிப்பில் ஒவ்வோர் ஊராட்சிக்கும் ஒவ்வொரு வகையான இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஊராட்சிகள் முழுமையாக விடுபட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய பரிசீலனை மேற்கொண்டு அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு இழப்பீடு கிடைக்கச் செய்ய வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.         
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com