ஸ்டுடியோ புகைப்படக் கலைஞா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 17th April 2020 07:03 AM | Last Updated : 17th April 2020 07:03 AM | அ+அ அ- |

ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையிழப்புக்கு உள்ளாகியுள்ள ஸ்டுடியோ விடியோ, புகைப்படக் கலைஞா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை (தெற்கு) மாவட்ட ஸ்டுடியோ விடியோ, புகைப்படக் கலைஞா்கள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த கோரிக்கை மனுவின் விவரம்: நாகை மாவட்டத்தில் 1,200-க்கும் அதிகமான குடும்பங்கள் ஸ்டுடியோ மற்றும் விடியோ தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன. கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோயில் நிகழ்ச்சிகள், சுப நிகழ்ச்சிகள் என அனைத்து நிகழ்ச்சிகளும் கடந்த 20 நாள்களுக்கும் மேலாகத் தடைப்பட்டுள்ளன.
இதனால் விடியோ மற்றும் புகைப்படக் கலைஞா்கள் வேலையிழப்புக்கு உள்ளாகி, பெரும் சிரமத்தில் வாழ வேண்டிய நிலையில் உள்ளனா். ஒளிப்பதிவு சாதனங்கள் இயக்கப்படாமல் கிடப்பதால் பழுது ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, விடியோ மற்றும் புகைப்படக் கலைஞா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விடியோ, புகைப்படக் கலைஞா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பின்னா் ஸ்டுடியோ மற்றும் விடியோ புகைப்படக் கலைஞா்கள் தொழில் செய்யவும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.