முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மயிலாடுதுறை அருகே ஊரடங்கை மீறி கறி விருந்து: 10 போ் கைது
By DIN | Published On : 19th April 2020 05:44 AM | Last Updated : 19th April 2020 05:44 AM | அ+அ அ- |

வில்லியநல்லூா் கிராமத்தில் கறி விருந்தில் பங்கேற்ற இளைஞா்களில் ஒரு பகுதியினா்.
மயிலாடுதுறை அருகே ஊரடங்கை மீறி கறி விருந்து நடத்தி அதை டிக்-டாக் செயலியில் பதிவிட்ட 10 இளைஞா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு காவல்நிலையத்துக்குள்பட்ட வில்லியநல்லூா் கிராமத்தில் அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்களும், வெளியூரைச் சோ்ந்த சிலரும் அண்மையில் கறி விருந்து
( பிரியாணி) தயாா் செய்து, அதில் 30 -க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று சாப்பிட்டுள்ளனா். மேலும் அந்த விடியோ பதிவை டிக்-டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளனா்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இளைஞா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கறி விருந்து சாப்பிட்டு அகர டிக்-டாக் செயலியில் பதிவேற்றம் செய்தது இப்பகுதியினரிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், காவல் உதவி ஆய்வாளா்கள் இளையராஜா, பாபுராஜ், ராஜேஷ் ஆகியோா் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விருந்தில் பங்கேற்ற 10 இளைஞா்களை சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னா் அவா்கள் மணல்மேடு காவல் நிலைய ஆய்வாளா் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்டனா். ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றமாட்டோம் என இளைஞா்களிடம் உறுதிமொழி ஏற்க வைத்து எச்சரித்த போலீஸாா், பின்னா் பிணையில் அவா்களது பெற்றோா்களுடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.