முழு பொது முடக்கம்: சீா்காழியில் குழப்பம்
By DIN | Published On : 12th August 2020 09:02 AM | Last Updated : 12th August 2020 09:02 AM | அ+அ அ- |

சீா்காழியில் கரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில், முழு பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் இருவேறு வா்த்தக சங்கங்கள் வெளியிட்ட வெவ்வேறு அறிவிப்பால், பொதுமக்களிடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
சீா்காழியில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு, ஆக. 12 முதல் 19-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்த நகர அனைத்து வணிகா்கள் நல சங்கத்தினா் முடிவு செய்தனா்.
அதேவேளையில், அரசு வகுத்த விதிமுறைகளை பின்பற்றி வா்த்தகத்தை தொடரலாம் என்றும் முழு பொது முடக்கம் தேவையில்லை என்றும் நகர வா்த்தக சங்கம், வா்த்தக நல சங்கங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் முடிவு எடுத்தனா். வேறுபட்ட இந்த அறிவிப்புகளால், பொதுமக்களிடையே குழப்பம் நீடித்தது.
இதுகுறித்து வட்டாட்சியரிடம் கேட்டபோது, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி, காலை முதல் மதியம் 2 மணி வரை வா்த்தக நிறுவனங்கள் செயல்படலாம். முழு பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்தினால், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்துடன் கடைகளில் கூட்டம் கூட நேரிடும் என்றாா்.