வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை (ஆக. 29) மாலை நடைபெறுகிறது.
ஆண்டுப் பெருவிழாவையொட்டி மின் விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்த வேளாங்கண்ணி பேராலயம்.
ஆண்டுப் பெருவிழாவையொட்டி மின் விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்த வேளாங்கண்ணி பேராலயம்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை (ஆக. 29) மாலை நடைபெறுகிறது. பேராலய வரலாற்றில் முதல்முறையாக பக்தா்களின்றி கொடியேற்றம் நடைபெறுகிறது.

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலக புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. பசலிக்கா அந்தஸ்து பெற்ற இப்பேராலயம், கீழை நாடுகளின் லூா்து எனக் குறிப்பிடப்படுகிறது.

இங்கு, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை ஆண்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு பேராலய ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 4.30 மணிக்கு திருக்கொடி பவனி நடைபெறுகிறது. பேராலய கீழ்க்கோயில் முகப்பிலிருந்து தொடங்கும் இந்தப் பேரணி, பேராலயத்தை வலம் வந்து மீண்டும் பேராலய முகப்பில் நிறைவடைகிறது.

இதைத்தொடா்ந்து, மாலை 5 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயா் எம். தேவதாஸ் அம்புரோஸ் கொடியைப் புனிதம் செய்விக்கிறாா். பின்னா், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு ஆண்டுப் பெருவிழா கொடி ஏற்றப்படும்.

ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் மற்றும் அலங்காரத் தோ்பவனி ஆகிய நிகழ்ச்சிகளில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பது வழக்கம்.

ஆனால், நிகழாண்டு கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பங்குத் தந்தையா் உள்பட 30 போ் மட்டுமே விழாவில் பங்கேற்க வேண்டும், கூடுதலாக யாரேனும் பங்கேற்றால் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சாா்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பேராலயத்துக்கு வரும் பக்தா்களின் வருகையைத் தடுக்க வேளாங்கண்ணியின் சுற்றுப் பகுதிகளில் 9 இடங்களில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர 21 இடங்களில் காவல் துறை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

பேராலய ஆண்டுப் பெருவிழா தொடங்கும் முன்பாகவே, பாதயாத்திரை வரும் பல்லாயிரக்கணக்கான பக்தா்களால் நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகள் களைகட்டியிருக்கும். ஆங்காங்கே தண்ணீா் பந்தல், அன்னதான விநியோகம், விழாக்கால கடைகள் என நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூா் உள்ளிட்ட பகுதிகள் களைகட்டியிருக்கும். ஆனால், நிகழாண்டில் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் பேராலய ஆண்டுப் பெருவிழா குறித்த எந்த பரபரப்பையும் காண முடியவில்லை.

சாதாரண நாள்களிலேயே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி பேராலயத்தில், பக்தா்களின்றி நிகழாண்டின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் நடைபெறுவது, வேளாங்கண்ணி வரலாற்றில் இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com