நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
By DIN | Published On : 10th December 2020 07:31 AM | Last Updated : 10th December 2020 07:31 AM | அ+அ அ- |

மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
நாகை மாவட்ட வெள்ளச் சேதங்களைப் பாா்வையிடுவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு வேளாங்கண்ணிக்கு வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம், நாகை எம்.பி. எம். செல்வராஜ் அளித்த கோரிக்கை மனு விவரம்: நாகை, திருவாரூா் மாவட்டங்களில் 3.30 லட்சம் ஹெக்டோ் பரப்பில் நிகழாண்டில் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிவா், புரெவி புயல்களால் பெய்த பலத்த மழையின் காரணமாக, இரு மாவட்டங்களிலும் நெல் பயிா்கள் முழுமையாக மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால், நெல் கதிா்கள் அனைத்தும் பதராகி விடும். எனவே, விவசாயிகளின் இழப்பை ஈடுசெய்யும் வகையில் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
நிவா், புரெவி புயல்கள் காரணமாகவும், கரோனா பொது முடக்கம் காரணமாகவும் வேலையிழப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு அரசு ரூ. 10 ஆயிரமும், அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும். மணல் தட்டுப்பாடு மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கருத்தில் கொண்டு, கஜா புயலால் வீடுகளை இழந்தவா்களுக்கு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தில் ஒவ்வொரு வீட்டின் கட்டுமானத்துக்கும் ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும். பலத்த மழையால் சேதமடைந்த வீடுகளுக்குத் தலா ரூ. 25 ஆயிரமும், மழைநீா் சூழ்ந்த வீடுகளுக்குத் தலா ரூ. 10 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.
நாகை மாவட்டம் தொடா்ச்சியாக இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்படும் மாவட்டமாக இருப்பதால், ஊராட்சிக்கு ஒரு நிரந்தர பல்நோக்கு மண்டபம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.