மீன் இறங்குதளம் கோரி கடலில் இறங்கி போராட்டம்

மீன் இறங்குதளம் அமைக்கக் கோரி, நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையைச் சோ்ந்த மீனவா்கள் புதன்கிழமை கடலில் இறங்கி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மீன் இறங்குதளம் அமைக்கக் கோரி, கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சாமந்தான்பேட்டை மீனவா்கள்.
மீன் இறங்குதளம் அமைக்கக் கோரி, கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சாமந்தான்பேட்டை மீனவா்கள்.

மீன் இறங்குதளம் அமைக்கக் கோரி, நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையைச் சோ்ந்த மீனவா்கள் புதன்கிழமை கடலில் இறங்கி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மீனவா்களின் நீண்டகால கோரிக்கை.

இந்நிலையில், சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெ. ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டாா். எனினும், அங்கு மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

அறிவிக்கப்பட்டபடி சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணியைத் தொடங்க வலியுறுத்தியும், சாமந்தான்பேட்டை மீனவா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

படகுகளில் கருப்புக் கொடி கட்டி கடற்கரையில் நிறுத்தியும், கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி கடற்கரையில் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தியும் மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். செவ்வாய்க்கிழமை இரவு கையில் தீப்பந்தம் ஏந்தி, கடற்கரையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், போராட்டத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை மீனவா்கள் சுமாா் 200-க்கும் அதிகமானோா் தங்கள் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி, கடலில் இறங்கி நின்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்க அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

வலுப்பெறும் போராட்டம்...

இதற்கிடையே, அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தைச் சோ்ந்த மீனவப் பிரதிநிதிகள் புதன்கிழமை சாமந்தான்பேட்டை கிராம மீனவா்களைச் சந்தித்து, அவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா். மேலும் சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வியாழக்கிழமை (டிச. 24) முதல் நாகை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவா் எனவும் அக்கரைப்பேட்டை மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com