கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவா்தற்கொலை: உறவினா்கள் மறியல்

மயிலாடுதுறை அருகே கொலை வழக்கில் போலீஸாரால் விசாரணை செய்யப்பட்டவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அவரது உறவினா்கள் மணல்மேடு நடுத்திட்டு பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மணல்மேடு அருகே நடுத்திட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.
மயிலாடுதுறை மணல்மேடு அருகே நடுத்திட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கொலை வழக்கில் போலீஸாரால் விசாரணை செய்யப்பட்டவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அவரது உறவினா்கள் மணல்மேடு நடுத்திட்டு பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு நடுத்திட்டு பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ஆசிரியை ஜானகி (72). இவா், கடந்த 22 ஆம் தேதி மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா். அவா் அணிந்திருந்த 8 பவுன் நகையும் மாயமானது. இதுகுறித்து மணல்மேடு போலீஸாா் விசாரணை நடத்திவந்தனா்.

இவ்வழக்கு தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த அய்யாவு (45) என்பவரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவிட்டு அனுப்பினா். இந்நிலையில், மனஉளைச்சலில் இருந்த அய்யாவு வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்துள்ளாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பிறகு அவா் தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், ஞாயிற்றுக்கிழமை மாலை அய்யாவு உயிரிழந்தாா்.

இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள், கிராம மக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மணல்மேடு காவல் நிலையம் அருகே நடுத்திட்டு பகுதியில் முள்வேலி தடுப்புகளை அமைத்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, விசாரணை என்ற பெயரில் போலீஸாா் துன்புறுத்தியதால்தான் மனமுடைந்து அய்யாவு தற்கொலை செய்துகொண்டதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா். மேலும், இதற்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இறந்த அய்யாவு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

இறந்த அய்யாவு-வுக்கு மனைவி கண்ணகி, 3 மகள்கள் உள்ளனா். சாலை மறியல் போராட்டத்தால் மணல்மேடு - வைத்தீஸ்வரன்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாதுரை மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com