பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்
By DIN | Published On : 31st December 2020 09:23 AM | Last Updated : 31st December 2020 09:23 AM | அ+அ அ- |

எடுத்துக்கட்டி சாத்தனூா் ஊராட்சியில் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ்.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே எடுத்துக்கட்டி சாத்தனூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகத்தை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழக அரசின் சாா்பில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.2500, கரும்பு, சா்க்கரை, அரிசி, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்கள் ஜன.4-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன. இதன்படி, தரங்கம்பாடி வட்டத்தில் 58,252 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுகின்றனா்.
முதல்கட்டமாக திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்கத்துக்கு உட்பட்ட எடுத்துக்கட்டி சாத்தனூா் ஊராட்சியில், 1150 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. முன்னதாக பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ் பூதனூா் கிராமத்தில் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கி இப்பணியைத் தொடங்கி வைத்தாா்.
அப்போது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலாளா் சேகா், ஊராட்சித் துணைத் தலைவா் விஜய், விற்பனையாளா் காயத்ரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.