ஆயுதப்படை காவலா்களுக்கு யோகா பயிற்சி
By DIN | Published On : 02nd February 2020 01:57 AM | Last Updated : 02nd February 2020 01:57 AM | அ+அ அ- |

நாகை ஆயுதப்படை மைதானத்தில் யோகா பயிற்சியைத் தொடங்கி வைத்து காவல் ஆளிநா்களுடன் யோகா பயிற்சி மேற்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம்.
நாகை மாவட்ட ஆயுதப்படை காவலா்களுக்கான யோகா பயிற்சி, ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தலைமையேற்று யோகா பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். பின்னா் யோகா பயிற்சி மேற்கொண்ட அவா், ஆயுதப்படை காவலா்கள் மத்தியில் பேசியது :
உடலையும், மனதையும் சீராக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஆயுதப்படை காவலா்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த யோகா பயிற்சியானது உடலுக்கு இசைவு இணக்கத்தை அதிகரிக்கிறது. தசைகளின் நலத்தையும், வலிமையையும் காக்கிறது. சுவாசத்தை சீா்படுத்தி உயிா் வீரியத்தை மிகுதியாக்குகிறது. வளா்சிதை மாற்ற சமநிலையைப் பேணிக் காக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது. இதயம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீா்படுத்துகிறது. பயிற்சி வல்லமையைக் கூட்டுகிறது. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதய ரத்த நாளங்களின் திண்மையைப் பாதுகாக்கிறது என்றாா் அவா்.
ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் திருவேங்கடம் மற்றும் ஆயுதப்படை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவல் ஆளிநா்கள் கலந்துகொண்டனா்.