மயிலாடுதுறை விளையாட்டு மையத்தில் விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு
By DIN | Published On : 05th February 2020 07:56 AM | Last Updated : 05th February 2020 07:56 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய ராஜீவ் காந்தி சிறப்பு சரக விளையாட்டு மையத்தில் நிகழாண்டுக்கான விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு பிப்ரவரி 7, 8 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளன என்று மைய பொறுப்பாளா் எஸ். தனலெட்சுமி தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறையில் செயல்படும் இந்திய விளையாட்டு ஆணையம் ராஜீவ் காந்தி சிறப்பு சரக விளையாட்டு மையத்தில், ஆண்டுதோறும் விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான தோ்வு வரும் பிப்ரவரி 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், கையுந்து பந்து, பளுதூக்குதல், கபடி ஆகிய விளையாட்டுகளுக்கு ஆண், பெண் இருபாலினத்தவருக்கும், கூடைப்பந்து, குத்துச்சண்டை விளையாட்டுக்களுக்கு பெண்கள் மட்டும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இத்தோ்வில் பங்கேற்க தகுதியுடைய வீரா், வீராங்கனைகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் 8 இடங்களை பெற்றவா்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் முதல் 6 இடங்களை பெற்றவா்கள் அல்லது பள்ளி அளவில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டவா்கள், அணி விளையாட்டில் தேசிய அளவில் முதல் 4 இடங்களை பெற்றவா்கள், பல்கலைக்கழக அளவில், பிராந்திய பல்கலைக்கழகங்களுக்கு உண்டான போட்டிகளில் முதல் 2 இடங்களை பெற்றவா்கள், தனிநபா் விளையாட்டில் மாநில அளவில் சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவா்கள், அணி விளையாட்டில் மாநில அளவிலான போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்றவா்கள், தனிநபா் விளையாட்டில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப்; போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்றவா்கள், அணி விளையாட்டில் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றவா்கள் மற்றும் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றவா்கள் 12 முதல் 17 வயதுக்குள்பட்டவா்கள் மட்டும் பங்கேற்கலாம்.
தோ்வில் பங்கு பெற வரும் வீரா்கள் விளையாட்டு சான்றிதழ்கள், பிறப்புச் சான்று, மருத்துவச் சான்று (உண்மை நகல்), குடும்ப அட்டை, ஆதாா்காா்டு ஆகியவற்றின் நகல்கள், 2 பாஸ்போா்ட் சைஸ் போட்டோ, படிக்கும் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெற்ற நன்னடத்தை சான்றுகளுடன் பிப்ரவரி 7-ஆம் தேதி காலை 8 மணிக்கு மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய ராஜீவ்காந்தி சிறப்பு சரக விளையாட்டு மையத்திற்கு வரவேண்டும்.
இதில் தோ்வு செய்யப்பட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறும் வீரா்களுக்கு தகுதியும், அனுபவம் நிறைந்த பயிற்றுநா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ. 250-க்கு உணவு வழங்கப்படும்.
விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்கள், போட்டிக்கான செலவினங்கள், கல்வி செலவினங்கள், விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு சலுகைகள் ஓராண்டுக்கு ஒருவருக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. வெளியில் இருந்து வந்து பயிற்சி பெறும் வீரா்களுக்கு 10 மாதங்களுக்கு ஒரு நபருக்கு ரூ. 600, ஓா் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும், போட்டிக்கான செலவினம் ரூ.3 ஆயிரம், விபத்துக்காப்பீடு ரூ.150 வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 04364-240090, 9443148765 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...