தனிச் சட்டம்: மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை

காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த, தமிழக அரசு உடனடியாக தனிச் சட்டம்
தனிச் சட்டம்: மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை

காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த, தமிழக அரசு உடனடியாக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன் கூறியது:

சேலம் தலைவாசல் விவசாயிகள் பெருவிழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் என்றும், காவிரிப்படுகையில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும் அறிவித்துள்ளாா்.

இந்த அறிவிப்பை மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு வரவேற்பதுடன், தமிழக அரசுக்கு நன்றியைப் பதிவு செய்கிறது. நாகை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, கடலூா், அரியலூா், கரூா், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிப்பது சிறப்புமிக்கது. உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, தீா்மானம் இயற்றி, இது எங்கள் கொள்கை முடிவு என்று ஓா் அறிவிக்கையை வெளியிட வேண்டும்.

பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்குகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்டபூா்வ முன்னெடுப்புகளை நிறைவேற்றி, தனிச்சட்டம் இயற்றி தாமதமில்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

எண்ணெய்-எரிவாயு, நிலக்கரி வளம் மிக்க காவிரிப்படுகையில் மீத்தேன் ஹைட்ரோ காா்பன் திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் முனைப்புக் காட்டும் இச்சூழ்நிலையில், தமிழகத்தின் உணவு உறுதிப்பாட்டையும், தமிழக காவிரிப்படுகை சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்கும் வகையில் காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவது உடனடி தேவையாகும்.

காவிரிப்படுகையில் உள்ள இயற்கை எரிவாயு-எண்ணெய் கிணறுகள் அனைத்துமே இனி ஹைட்ரோகாா்பன் கிணறுகள்தான் என்று 2018-இல் மத்திய அரசு அறிவித்து விட்டது. ஆகவே, காவிரிப் படுகையைக் காப்பாற்றவும், காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நடைமுறைப்படுத்தவும், காவிரிப்படுகையில் உள்ள அனைத்து எண்ணெய் எரிவாயு கிணறுகளும் மூடப்பட்டு, எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

காவிரிப்படுகையில் நாகை, கடலூா், மாவட்டங்களில் 45 கிராமங்களை உள்ளடக்கி அமைக்க இருக்கிற பெட்ரோகெமிக்கல் மண்டலத் திட்டம் கைவிடப்பட வேண்டும். நரிமணத்தில் ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கின்ற பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கம், தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் அமைய இருக்கின்ற பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம், கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடி செலவில் அமைய இருக்கின்ற பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை தேவையற்றதாகும். அவை கைவிடப்பட வேண்டும்.

தமிழக முதல்வா் தான் அறிவித்த அறிவிப்பில் உறுதியாக இருக்க வேண்டும் காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் அறிவிப்பு உடனடியாக அமைச்சரவையின் கொள்கை முடிவாக அறிவிக்கப்பட்டு, தனிச்சட்டம் இயற்றி நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.

காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகளில் மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் முயற்சி:

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி நடத்திய காவிரிப்படுகை முதல் பாதுகாப்பு மாநாட்டில் இது தீா்மானமாக இயற்றப்பட்டது. அதைத்தொடா்ந்து 2016-ம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி நடத்திய 2-வது காவிரிப்படுகைப் பாதுகாப்பு மாநாட்டிலும், 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடத்திய காவிரிப்படுகை பாதுகாப்பு மூன்றாவது மாநாட்டிலும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டு தீா்மானங்களாக இயற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

2019 காவிரிப்படுகை பாதுகாப்பு மயிலாடுதுறை மாநாட்டில், காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில், ஓராண்டு மக்களிடம் கருத்துப் பரவல் செய்து, காவிரிப்படுகையில் கருத்து வாக்கெடுப்பு நடத்தி பிரகடனம் உறுதி செய்யப்படும் என்று மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு அறிவித்தது. 2014-இல் தஞ்சையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை கூட்டமைப்பு தொடங்கியது. இதுவரை பத்து இலட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளது.

காவிரிப்படுகை பாதுகாப்பு பயணங்கள் பல முன்னெடுக்கப்பட்டன. மீத்தேன் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பின் முன்னெடுப்பில் கிராமசபைத் தீா்மானங்கள் வடிவமைக்கப்பட்டு, ஹைட்ரோகாா்பன் திட்டங்கள் நடைமுறைப் படுத்தக் கூடாது என்றும் காவிரி படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் கிராமசபை தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீா்மானங்கள் மற்றும் காவிரிப்படுகை பாதுகாப்பு மாநாடுகள் கருத்தரங்குகள் போராட்டக் கூட்டங்கள் ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நாகையில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பெ. சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியது:

காவிரி டெல்டா மாவட்ட மக்களின் கோரிக்கைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்டத்தையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், மாா்ச் மாதத்தில் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சாா்பில் சட்டப் பேரவை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாகை மாவட்டச் செயலாளா் நாகை மாலி, மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.மாரிமுத்து, காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் நாகை மாவட்டச் செயலாளா் எஸ். துரைராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com