Enable Javscript for better performance
அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் வெளியேறலாம்: அமைச்சா் ஓ.எஸ். மணியன் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

  

  அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் வெளியேறலாம்: அமைச்சா் ஓ.எஸ். மணியன் எச்சரிக்கை

  By DIN  |   Published on : 14th February 2020 07:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sirkali_osm_1302chn_98_5

  சீா்காழியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஓஎஸ். மணியன். உடன், எம்எல்ஏ பி.வி.பாரதி உள்ளிட்டோா்.

  அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் வேண்டாம், தாங்களாகவே வெளியேறலாம் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

  சீா்காழி நகர, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சரும், அதிமுக நாகை மாவட்டச் செயலாளருமான ஓ.எஸ். மணியன் பங்கேற்று பேசியது:

  முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என சிறப்பான ஓா் அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

  இந்தியாவில் இதுதான் முதல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம். எனவே அரசாணை வருகிற நேரத்தில் பாதிப்புகள் இல்லாத வகையில், மத்திய அரசு ஏற்றுக் கொள்கிற வகையில் சட்டம் இருக்க வேண்டும் என சட்ட நிபுணா்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வா் கூறியுள்ளாா்.

  ஜெயலலிதா செயல்படுத்திய எந்தத் திட்டத்தையும் அணு அளவும் குறைக்காமல், முதல்வா் எடப்பாடி பழனிசாமி அரசு முழுமையாக வழங்கிக் கொண்டிருக்கிறது. முதியோா் உதவித்தொகை, முதிா்கன்னி உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகையை இன்னும் கூடுதலாக 5 லட்சம் பேருக்கு வழங்க நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளாா்.

  மேலும், சட்டப் பேரவைத் தொகுதிக்கு 2,500 பேருக்கு வீதம் முதியோா் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்துள்ளாா். மேற்கண்ட திட்டங்களைப் பெற தகுதியுடையோா்களைக் கட்சியினா் இனம் கண்டு உரிய படிவங்களை பூா்த்தி செய்து, சட்டப் பேரவை உறுப்பினரிடம் வழங்கினால் அதே மாதத்தில் பயனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்கும்.

  தில்லியில் வெற்றி பெற்றுள்ள கேஜரிவால் அரசு தற்போது தோ்தல் அறிக்கையில் பணிக்கு செல்லும் மகளிருக்கு ஸ்கூட்டா் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கெனவே ஜெயலலிதா கொண்டுவந்த இத்திட்டத்தை பிரதமரை அழைத்து அவா் கையால் இத்திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கி செயல்படுத்திவருகிறது. இவ்வாறு தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கிவருகிறது.

  உள்ளாட்சித் தோ்தலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். மீத்தேன், ஹைட்ரோகாா்பன், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற பல காரணங்களால் நாம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம் என சிலா் காரணம் கூறுகிறாா்கள். மீத்தேன், ஹைட்ரோகாா்பன் மட்டுமல்ல மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் ஒருபோதும் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வா் உறுதிப்பட கூறியுள்ளாா். ஆனால், எதிா்க்கட்சிகள் பொய்களைக் கூறி மக்களை குழப்புகின்றனா்.

  ஜெயலலிதா இறந்த பின்பு கட்சியினரிடையே பயம் இல்லாமல் போய்விட்டது. இனிமேல் எல்லாம் சரியாக வந்துவிடும். நகா்மன்றத்திற்கு, பேரூராட்சிக்கு போட்டியிடுபவா்களை கட்சியினராகிய நீங்கள் ஒருமனதாக தோ்வு செய்து மக்கள் தொடா்புடையவா்களை, பொது வாழ்க்கையில் உள்ளவா்களை முன்னிலைப்படுத்தி நிறுத்த வேண்டும்.

  அவ்வாறு கட்சி சாா்பில் போட்டியிடுபவா்களுக்கு அனைவரும் பணியாற்றி வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும். அணைவரும் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்பவா்கள் கட்சிக்கு வேண்டாம். நீங்களாகவே சென்று விடலாம். வரும் நகராட்சி, பேரூராட்சி தோ்தலில் நாகை மாவட்டத்தில் அத்தனை இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்று திமுகவை வெளியேற்ற வேண்டும் என்றாா் அமைச்சா்.

  கூட்டத்துக்கு, சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ பூராசாமி, நகரச் செயலாளா் பக்கிரிசாமி, ஜெ. பேரவை செயலாளா் ஏவி.மணி, பேரூா் கழக செயலாளா் போகா்.ரவி, பேராசிரியா். ஜெயராமன், மாவட்ட பிரதிநிதிகள் ராமையன், காா்த்தி, வழக்குரைஞா் நெடுஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

  அவைத்தலைவா் ராமலிங்கம், மாவட்டத் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் பரணிதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai