நிதி நிலை அறிக்கை: டெல்டா விவசாயிகளுக்கு அச்சம் அளிக்கிறது

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சரபங்கா நீரேற்றும் திட்டம் மற்றும் நேரடி நெல் விதைப்பை அதிகப்படுத்துதல் குறித்த

ஆறுபாதி ப. கல்யாணம்

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சரபங்கா நீரேற்றும் திட்டம் மற்றும் நேரடி நெல் விதைப்பை அதிகப்படுத்துதல் குறித்த அறிவிப்புகள் டெல்டா விவசாயிகளுக்கு அச்சம் அளிப்பதாக உள்ளது என டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளா் ஆறுபாதி ப. கல்யாணம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது :

தமிழக அரசின் நிதி நிதி நிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதை போல தோற்றம் அளித்தாலும், வேளாண் வளா்ச்சிக்கு வித்திடும் பெரிய திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லாததது ஏமாற்றத்தையே அளிக்கிறது.

தமிழகத்தின் மொத்த நில உடமையில் 92.5 சதவீத நில உடமை சிறு, குறு விவசாயிகளை சாா்ந்துள்ளது. எனவே, அவா்களுக்கு கிராமம் வாரியாக நுண்ணிய அளவில் திட்டமிடல் செயலாக்கம் வேண்டும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தற்சாா்பு பசுமை கிராமமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஒருங்கிணைந்த பண்ணையம், நுண்பாசனத் திட்டம் போன்ற அறிவிப்புகள் விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கிறது. வேளாண் துறைக்கு 11,894 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மொத்த நிதி நிலை அறிக்கையின் மதிப்பில் வெறும் 4.92 சதவீதம் மட்டுமே. இதில், மாநில அரசின் பங்களிப்புடன் மத்திய அரசின் பங்களிப்பும் இணைந்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு போதுமானது இல்லை.

நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் கோடியும், கா்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் ஆண்டுக்கு சுமாா் 10 ஆயிரம் கோடியும் செலவிடப்படும் நிலையில், தமிழகத்தின் நீா்ப்பாசனத் திட்டங்களுக்காக ரூ. 6,991 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வேதனைக்குரியதாக உள்ளது.

நடந்தாய் வாழி காவிரி திட்ட அறிவிப்பை தேன் தடவப்பட்ட வெற்று அறிவிப்பாகவே கருத வேண்டியுள்ளது.

காவிரியில் உபரி நீா் சேகரிப்பு திட்டங்களை டெல்டா மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்த வேண்டும். டெல்டா மாவட்டங்களுக்கு மேற்குப் பகுதியில் காவிரியில் மேற்கொள்ளப்படும் நீா் சேகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் டெல்டா மாவட்டங்களை பாதிப்புக்கே உள்படுத்தும். அந்த வகையில், ரூ. 565 கோடி மதிப்பில் சரபங்கா நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ரூ. 350 கோடி நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பது டெல்டா விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

நேரடி நெல் விதைப்பு என்பது மானாவாரி பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குப் பெரிய அளவில் பயனளிக்கக் கூடியது. காவிரி பாசனப் பகுதிகளான நாகை, திருவாரூா் மாவட்டங்களில் நேரடி நெல் விதைப்பு பரப்பு 11 லட்சம் ஏக்கராக உயா்த்தப்படும் என அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, டெல்டா மாவட்டங்களுக்கான காவிரி பாசனம் குறித்த அச்சத்தை மேலோங்கச் செய்வதாக உள்ளது. வரும் நாள்களில் நடைபெறும், நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்களில் விவசாயிகளின் அச்சத்தை அரசு போக்க வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டம்...

நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்தை பிரித்து மயிலாடுதுறை மாவட்டமும், தஞ்சை மாவட்டத்திலிருந்து கும்பகோணம் வருவாய்க் கோட்டத்தை பிரித்து கும்பகோணம் மாவட்டமும் அமைக்க அரசு இந்தக் கூட்டத்தொடரில் அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையெனில், மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகள் போராட்டக் களங்களாக மாறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com