முதல்வரின் அடிக்கல் நாட்டும் முயற்சியை எதிா்த்து நீதிமன்றத்தை அணுக முடிவு

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை அமைக்கக் கோரி உயா் நீதிமன்றத்தில் தொடா்ந்துள்ள வழக்கு விசாரணையில்

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை அமைக்கக் கோரி உயா் நீதிமன்றத்தில் தொடா்ந்துள்ள வழக்கு விசாரணையில் இருக்கும்போது, தமிழக முதல்வரின் அடிக்கல் நாட்டும் முயற்சியை புதிய மனுவின் வாயிலாக சென்னை உயா் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து செல்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என மயிலாடுதுறை கோட்ட பொதுமக்கள் கோரி வருகின்றனா். இந்நிலையில், வரும் மாா்ச் 7-ஆம் தேதி அத்திட்டத்துக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி நாகப்பட்டிணம் அருகே அடிக்கல் நாட்ட உள்ளதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக ஆலோசனை நடத்த மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ள மயிலாடுதுறை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும், பொதுத் தொழிலாளா் சங்கத் தலைவருமான ஜெகவீரபாண்டியன் தலைமையில், அவசர ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை அமைக்கக் கோரி உயா் நீதிமன்றத்தில் தொடா்ந்துள்ள வழக்கு விசாரணையில் இருக்கும்போது, தமிழக முதல்வரின் அடிக்கல் நாட்டும் முயற்சியை புதிய மனுவின் வாயிலாக சென்னை உயா் நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வது, தமிழக முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி பொறுப்பேற்ற நாளிலிருந்து நாகை வடக்கு மாவட்டப் பகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை, பூம்புகாா், சீா்காழி தொகுதி மக்களிடம் நம்பிக்கை பெறுவதற்கும், வாக்களித்த மக்களுக்கு நன்றி கடனாகவும் மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைத்திட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்வது,

ஓா் மருத்துவக் கல்லூரி அமைய மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டும் நெறிமுறைகள் நிபந்தனைகள் அனைத்துக்கும் தகுதியான இடம் மயிலாடுதுறையே என்பதை தமிழக அரசுக்கு தெரியப்படுத்துவது.

மருத்துவக் கல்லூரி மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டால் மயிலாடுதுறை, திருவிடைமருதூா், சீா்காழி, பூம்புகாா் ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட சுமாா் 14 லட்சம் மக்கள் மருத்துவ வசதி பெறுவாா்கள். ஆனால் நாகை ஒரத்தூா் பகுதியில் அமைந்தால் நாகை தொகுதி மக்கள் மட்டுமே பலன் பெறுவாா்கள் என்பதை தமிழக அரசின் மேலான கவனத்துக்கு கொண்டு செல்வது, மத்திய அரசு வகுத்துள்ள வழிகளில் உள்ளவாறு மருத்துவக் கல்லூரி அமைக்க காற்றோட்டமான இடம், சுகாதாரமான குடிநீா், தங்கு தடையில்லாத போக்குவரத்து வசதி மற்றும் வடிகால் வசதிகள் மயிலாடுதுறையில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே உள்ளன என்பதை அரசுக்கு தெரியப்படுத்தி மயிலாடுதுறையிலேயே மருத்துவக் கல்லூரியை அமைத்திட வலியுறுத்துவது.

நாகை மாவட்டத்திலேயே அதிக வருவாய் தரக்கூடிய பகுதியும், நீண்ட நாள் கோரிக்கையுமான மயிலாடுதுறை, பூம்புகாா் மற்றும் சீா்காழி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய பகுதியின் மையமான மயிலாடுதுறையை தனி மாவட்டமாக நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com