அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 29th February 2020 02:43 AM | Last Updated : 29th February 2020 02:43 AM | அ+அ அ- |

திருமருகல்: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சமக்ரா சிக்சா) திட்டத்தின் கீழ் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளுக்கு இணங்க திருமருகல் ஒன்றியத்தில் வட்டார வள மையத்தின் மூலம் (சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி) என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சுமாா் 290 ஆசிரியா்கள் இதில் பங்கேற்றனா். இப்பயிற்சியானது திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஏனங்குடியில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது.
அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் எந்தவிதமான தடைகளும் இன்றி, பயமின்றி பாதுகாப்பாக கல்வி பயில வேண்டுமென்ற நோக்கில், அதற்கான பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த வாசகங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பள்ளிக்கல்வி மற்றும் கல்வியறிவுத்துறை வழிகாட்டலின்படி அனைத்து அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி சுவா்களில் எழுதிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியில் ஆசிரியா் பயிற்றுநா்கள் மாரிமுத்து, சந்தானம், காந்தி, புனிதா ஆகியோா் கருத்தாளா்களாக செயல்பட்டனா். பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) அமுதா செய்திருந்தாா்.