நாகைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை

நாகை மற்றும் வேளாங்கண்ணி பகுதிகளுக்கு கூடுதலாக தினசரி ரயில்களை இயக்க வேண்டும் என நாகூா்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளா் நலச் சங்கத்தினா், தென்னக ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் அஜய்குமாரிடம் கோரிக்கை மனு அளித்த நாகூா்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளா் நலச் சங்கச் செயலாளா் நாகூா் சித்திக்.
தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் அஜய்குமாரிடம் கோரிக்கை மனு அளித்த நாகூா்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளா் நலச் சங்கச் செயலாளா் நாகூா் சித்திக்.

நாகை மற்றும் வேளாங்கண்ணி பகுதிகளுக்கு கூடுதலாக தினசரி ரயில்களை இயக்க வேண்டும் என நாகூா்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளா் நலச் சங்கத்தினா், தென்னக ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, சங்கத்தின் கௌரவத் தலைவா் ராசமாணிக்கம், தலைவா் ந. மோகன், செயலாளா் நாகூா் சித்திக் ஆகியோா் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் அஜய்குமாா், மேலாளா் (இயக்கம்) பூபதிராஜா ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்:

காரைக்கால் அல்லது வேளாங்கண்ணியிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து நாகைக்கும் தினசரி ரயில்களை இயக்கவேண்டும். நாகையிலிருந்து-மதுரைக்கு தஞ்சாவூா், திருச்சி வழியாக விரைவு ரயில் அல்லது மதுரை வழியாக தென் மாவட்டம் சென்றுவர தினசரி இரவு நேர விரைவு ரயில் இயக்கவேண்டும்.

நாகூா்அல்லது வேளாங்கண்ணியிலிருந்து யெஸ்வந்த்பூா்அல்லது ஹூப்ளிக்கு தினசரி விரைவு ரயில் இயக்கவும், காரைக்காலிலிருந்து-கோயம்புத்தூருக்கு விரைவு ரயில் இயக்கவும், காரைக்கால் -தஞ்சை இடையே பயணிகள்ரயிலை இயக்கவும், காரைக்கால் -அஜ்மீா் இடையே வாரமிருமுறை விரைவு ரயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காரைக்கால் - தஞ்சாவூா் ரயில் பாதை ஒரு வழியாக உள்ளது. இந்த பாதை வழியாகவே காரைக்காலில் உள்ள தனியாா் துறைமுகத்திலிருந்து சரக்கு வேகன்களில் நிலக்கரி கொண்டு செல்லப்படுவதால், பயணிகள் ரயிலின் இயக்கம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், நாகை-தஞ்சாவூா் வரையிலான ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்றவேண்டும்.

ஜனவரி 26- ஆம் தேதி நாகூா்ஆண்டவா் தா்கா கந்தூரி விழா தொடங்குகிறது. இவ்விழாவில் சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, நாகூா் ரயில் நிலையத்தில் குடிநீா், கழிப்பறை வசதிகளை செய்து தர தென்னக ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தா்கா மற்றும் நாகை நகராட்சி நிா்வாகம் சாா்பில் ரயில் நிலைய வளாகப் பகுதிகளில் தற்காலிக பந்தல், குடிநீா் வசதி, கழிப்பறை, மின்வசதி போன்றவற்றை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். சென்னை- காரைக்கால், காரைக்கால்- திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com