Enable Javscript for better performance
பொங்கல் பண்டிகை: நாகை கடைவீதிகள் மக்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    
    2941ng13auto_1301chn_5

    ஷோ் ஆட்டோக்களால் நெரிசலுக்கு உள்ளாகும் நாகை நீலா கீழ வீதியின் போக்குவரத்து.

    பொங்கல் பண்டிகையையொட்டி, நாகை கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டி வருகின்றன. நெறிப்படுத்தப்படாத போக்குவரத்தால், நாகை வீதிகள் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன.

    ஆடியில் விதைத்து, மாா்கழியில் அறுவடையாகும் நெல் மகசூலைக் கொண்டு, வருங்கால சுப நிகழ்வுகளின் தொடக்கமாகவும், வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கு நன்றிப் பகரும் வகையிலும் கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது பொங்கல் பண்டிகை.

    இதன்படி, வேளாண்மையைப் பிரதானமாகக் கொண்ட நாகை உள்ளிட்ட காவிரி கடைமடை மாவட்டங்களில், தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல், வீர விளையாட்டுகளுக்கான காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகள் முக்கியத்துவம் பெற்ற பண்டிகைகளாகக் கொண்டாடப்படுகின்றன.

    பொங்கல் பண்டிகைக்காக மண் பானை, சட்டி, அடுப்பு, கரும்பு மற்றும் இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து உள்ளிட்டவற்றின் விற்பனை கடந்த 2 நாள்களாக நாகை வீதிகளில் களைகட்டி வருகிறது. இதேபோல், மளிகைக் கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகின்றன.

    10 கரும்புகளைக் கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ. 200 முதல் ரூ. 250 வரையிலும், ஒரு கரும்பு ரூ. 25 முதல் ரூ. 30 என்ற விலையிலும், இஞ்சிக் கொத்து மற்றும் மஞ்சள் கொத்துகள் ரூ. 40 என்ற விலையிலும் விற்பனையாகின்றன. ஒரு கிலோ செவ்வந்தி பூ ரூ. 180 என்ற விலையிலும், கால் கிலோ ரூ. 50 என்ற விலையிலும் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது.

    பொங்கல் சீா் வரிசை வைப்பதற்காக கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து, பூ போன்ற சீா் வரிசை சாமான்களை வாங்குவதற்காக திரளானோா் கடைவீதிகளில் குழுமுவதால், அனைத்துக் கடைவீதிகளும் மக்கள் கூட்டத்தால் நிரம்புகின்றன. இதனால், அவ்வப்போது முக்கிய கடைவீதிகளில் போக்குவரத்துத் தடைப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கஜா புயல் சீற்றத்தால் பொங்கல் பண்டிகை களையிழந்திருந்த நிலையில், நிகழாண்டில் இயற்கையின் ஒத்துழைப்பால் ஓரளவு நல்ல முறையிலேயே நெல் வேளாண்மை நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக, நிகழாண்டின் பொங்கல் பண்டிகை மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போக்குவரத்து நெரிசல்...

    பண்டிகைக்கால தேவைகளுக்காக நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் நாகை கடைவீதிகளில் குழுமுவதால், பெரிய கடைத் தெரு, நீலா கீழ வீதி, தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படுகின்றன.

    கடந்த ஆண்டில், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நீலா கீழ வீதி உள்பட முக்கிய வீதிகள் ஒருவழிப் பாதைகளாக மாற்றப்பட்டு, ஷோ் ஆட்டோக்களின் இயக்கம் முக்கிய வீதிகளில் தடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நிகழாண்டில் போக்குவரத்தை நெறிப்படுத்த போலீஸாா் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், ஷோ் ஆட்டோ உள்ளிட்ட வாகனப் போக்குவரத்தால் நீலா கீழ வீதி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    கடந்த ஆண்டைப் போலவே போக்குவரத்து சீரமைப்புக்கு போலீஸாா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், நீலா கீழவீதி, தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஷோ் ஆட்டோ மற்றும் காா்களின் இயக்கத்தைத் தடுக்க வேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai