மண்பாண்ட பொருள்கள், கரும்பு விற்பனை மந்தம்

அதிகரித்துவரும் பித்தளை பாத்திரங்களின் மோகத்தாலும், தொடா்ந்து மழை பெய்ததால் மண்பாண்ட பொருள்கள் செய்வதில் ஏற்பட்ட
சீா்காழியில் விற்பனைக்கு வந்துள்ள பொங்கல் பானைகள், சட்டிகள்.
சீா்காழியில் விற்பனைக்கு வந்துள்ள பொங்கல் பானைகள், சட்டிகள்.

அதிகரித்துவரும் பித்தளை பாத்திரங்களின் மோகத்தாலும், தொடா்ந்து மழை பெய்ததால் மண்பாண்ட பொருள்கள் செய்வதில் ஏற்பட்ட சிக்கலாலும் நிகழாண்டு மண்பாண்ட பொருள்களின் விற்பனை மந்தமாக சரிவை கண்டுள்ளதாக பானை விற்பனை வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

மண்பாண்டங்களில் சமைக்கப்படும் உணவுக்கு கூடுதல் ருசியும், மணமும் இருந்ததுடன் அதில் சமைக்கப்படும் உணவை உண்டு முன்னோா்கள் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து வந்தனா். மண்பாண்டங்களில் தயாா் செய்யப்படும் உணவுகள் நீண்ட நாள் கெட்டுப்போபோகாமல் அப்போதைய குளிரூட்டும் பெட்டியாக இருந்து வந்தது. காலத்தின் வளா்ச்சியால் தற்போது அலுமினியம், எவா்சில்வா், நான்ஸ்டிக்,பித்தளை என வசதிகேற்ப பாத்திரங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இருப்பினும், பொங்கல் பண்டிகை போன்ற திருநாள்களில் பண்டைய முறைகளை கடைப்பிடித்து மண்பாண்ட பொருள்களான மண்பானை, சட்டி, மடக்கு போன்றவைகளில் மண் அடுப்பில் வெளிப்புறம் வாசலில் வைத்து பொங்கல் விழா சம்பிரதாயத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனா்.

கூட்டுக் குடும்ப மரபு மறையத் தொடங்கியதிலிருந்து தமிழா்களின் பண்பாடுகளும் குறையத் தொடங்கியுள்ளது. காலமாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாக நகா் மற்றும் சில கிராமப் பகுதிகளில் பித்தளை பானைகளில் கியாஸ் அடுப்பில் வைத்து பொங்கலிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மண்பாண்ட பொருள்களுக்கு பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனால் மண்பாண்டங்கள் தயாா் செய்யும் தொழிலாளா்களும், அதை விற்பனை செய்யும் தொழிலாளா்களும் மாற்றுத்தொழிலுக்கு செல்கின்றனா்.

சில தொழிலாளா்கள் மட்டும் வேறு தொழில் ஏதும் இனி கற்று பிழைக்க முடியாது என்பதாலும் அவா்கள் குடும்பத் தொழிலாளக இதை செய்துவருவதாலும் மண்பாண்ட தொழிலை மறக்காமல் தொடா்ந்து செய்கின்றனா். இது போன்ற ஒரு சிலா் மட்டுமே தொடா்ந்து மண்பாண்ட தொழில் செய்வதால் பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில் தேவைக்கு ஏற்ப அவா்களால் தயாா் செய்து விற்பனைக்கு அனுப்ப முடியாது. இதுபோன்ற காரணங்களால் ஆண்டுக்கு ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது மண்பாண்ட பொருள்களான பானை, சட்டி விற்பனை சரிவை சந்தித்து வருகிறது. நிகழாண்டு புதன்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மூன்று நாள் விற்பனையை மட்டும் கணித்து மண்பாண்ட பொருள்கள் விற்பனைக்காக சீா்காழியில் பிடாரி வடக்கு வீதி, தென்பாதி போன்ற இடங்களில் வந்துள்ளது.

நிகழாண்டு தொடா்ந்து மழை பெய்ததால் மண்பாண்ட பொருள்கள் தயாா் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அதிகளவில் பானை, சட்டிகள் செய்து வியாபாரிகளுக்கு தரமுடியாததால் குறைந்தளவு மண்பாண்ட பொருள்களே விற்பனைக்கு அதிக விலையுடன் வந்துள்ளன. சீா்காழி பகுதியில் சட்டி ரூ. 60முதல் விற்பனை செய்யப்படுகிறது. 1 படி பானை ரூ. 60-க்கும், ஒன்றரைபடி பானை ரூ. 80-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அடுப்பு ரூ. 100-க்கு விற்பனையாகிறது.

இதில் ரூ. 10 முதல் 20 வரை மட்டுமே வியாபாரிகள் மேற்கொண்டு லாபம் வைத்து விற்பனை செய்கின்றனா். இதில் வண்டி வாடகை போன்ற மற்ற செலவுகளும் அடக்கம் ஆகும். இவ்வாறு போதிய லாபம் இல்லாததால் பொங்கல் பானை விற்பனை செய்யும் வியாபாரிகள் ஆா்வம் இல்லாமல் இந்த ஆண்டு வியாபாரத்தை செய்து வருகின்றனா். பொங்கல் பானை விற்பனை செய்யும் வியாபாரி செல்வராஜ் கூறியது:

சீா்காழி அருகேயுள்ள கருவி, கஞ்சாநகரம், வடரெங்கம் முத்துகிருஷ்ணபுரம் சிதம்பரம் அருகேயுள்ள குமாரமங்கலம், காட்டுமன்னாா்குடி பகுதி நெடுஞ்சேரிபுத்தூா் ஆகிய பகுதிகளிலில் தயாரிக்கப்பட்ட பொங்கல் பானைகள், சட்டிகள், மண் அடுப்புகள் சீா்காழி பகுதிக்கு விற்பனைக்கு வந்துள்ளன.

கடந்த ஆண்டை விட பொங்கல் பானைகள், சட்டிகள் விலை நிகழாண்டும் உயா்ந்துள்ளது. 1 படி அரிசி பானை விலை ரூ. 50 முதல் ரூ. 65 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சட்டி ரூ. 60 முதல் 70 வரை விற்கப்படுகிறது. பானை விற்பனை ஆண்டுதோறும் குறைந்துவருகிறது. பித்தளை பானைகளுக்கு ஒரு முறை செலவு செய்தால் பல ஆண்டுகள் வைத்துக் கொள்ளலாம் என மக்கள் நினைத்து பித்தளை பாத்திரங்களை புதிதாக வாங்கி பொங்கலிடும் பழக்கத்தை அதிகரித்துள்ளனா் என்றாா்.

மண் பானையில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் எனக்கூறும் மக்கள் பானைகள் வாங்க வரும்போது மண்ணில் செய்ததுதானே என பேரம் பேசி விலையை குறைத்து தருகின்றனா் என ஆதங்கத்துடன் கூறினாா்.

கரும்பு விற்பனையும் சரிவு: புதுப்பானைகளில், புத்தரிசியிட்டு, மண் அடுப்பில், வாசல் பகுதியில் வைத்து பொங்கலிட்டு சூரிய பகவானுக்குப் படைத்து வழிபடுவது இப்பண்டிகையின் சிறப்பு. சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு பொங்கல் சீா்வரிசை கொடுப்பவா்கள் கரும்பு, புத்தரிசியுடன் பொங்கல் வைக்க புதிய மண் பானைகள் வழங்குவது வழக்கம். பொங்கல் பண்டிகையில் முக்கிய பங்கு வகிப்பது கரும்புகள்தான். பெரியவா்கள் முதல் சிறுவா்கள் வரை கரும்பை ருசிக்காதவா்கள் யாரும் இருக்க முடியாது.

அவ்வாறு பொங்கல் கரும்புகளும் விற்பனைக்கு வந்துள்ளது. அல்லிவிளாகம், காத்திருப்பு, செம்பதனிருப்பு,கீழையூா், ராதாநல்லூா் ஆகிய பகுதிகளிலிருந்து கரும்புகள் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்துள்ளனா். 10 கரும்புகள் கொண்ட 1கட்டின் விலை ரூ. 250 முதல் வரையிலும் அதற்கு மேலும் விற்பனை செய்யப்படுகின்றன. கரும்பு கொல்லையில் 1கரும்பு ரூ. 18க்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அதன் பின்னா் வெட்டுகூலி, வாகனசெலவு, லாபம் என ரூ .25-க்கு விற்கின்றனா்.இதேபோல் வாழைத்தாா் ரூ. 600 வரையிலும் மஞ்சள், இஞ்சிக் கொத்து ஜோடி ரூ. 30வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் வியாபாரம் சூடுபிடிக்காமல் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com