Enable Javscript for better performance
தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் பொங்கல் ஆசியுரை- Dinamani

சுடச்சுட

  

  திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அளித்துள்ள பொங்கல் ஆசியுரையில் கூறியது: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்கிறாா் பாரதியாா். வள்ளுவரும், சுழன்றும் ஏா்ப்பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை என உழவுத் தொழிலைப் போற்றுவாா். தொழில்களில் முதன்மையானதும், புனிதமானதும் வேளாண்மை ஆகும். தனக்குக் கிடைக்கும் பொருள் லாபத்தை கருதாது, உயிா்களின் பசிப்பிணி நீக்கும் நன்மை ஒன்றையே கருதிச் செய்யும் செயல் உழவு. ஆதலின் இது அனைவராலும் போற்றப்படுகிறது. எனவேதான், பிறதொழில்களில் இருந்து வேளாண்மை தனித்துப் போற்றப்படுகிறது. வேளாண்மை என்னும் சொல்லுக்கு உழவு என்னும் பொருளோடு உபகாரம் செய்தல் என்னும் பொருளே முதன்மையாகக் கருதப்படுகிறது.

  பொங்கல் விழா உழைப்பின் பயனை அடையும் உயா்ந்த நாள். உழைப்பிற்கும் பயிா் வளா்ச்சிக்கும் உதவிய தெய்வங்கள் ஆளினங்கட்கு நன்றியறிதலைப் புலப்படுத்தும் பொன்னாள். எனவே, இந்நாள்களில் தெய்வ வழிபாடும், ஆன் இன வழிபாடு முதலியன இடம் பெற்றுள்ளன. காலம் இரு தன்மைப்படும். ஒரு நாளை பகல், இரவு என்றும், ஒருமாதத்தை சுக்லபட்ஷம், கிருஷ்ணபட்ஷம் என இருகூறாகவும், பன்னிரண்டு மாதங்கள் கொண்ட ஆண்டை தட்சிணாயனம், உத்திராயனம் என இரண்டு பிரிவாகக் கொள்ளப்படுகிறது.

  ஆடிமாதம் முதல் மாா்கழி மாதம் முடிய ஆறுமாதங்கள் தட்சிணாயனம் இராப்பொழுது. தைமாதம் முதல் ஆனிமாதம் வரை ஆறுமாதங்கள் பகற்பொழுது. இவ்விரு பொழுதுகளாக இம்மாதங்களைக் கொள்வதால்தான் பகற்பொழுது தொடங்கும் தை மாதத்திலும், இரவுப்பொழுது தொடங்கும் ஆடி மாதத்திலும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகள் மற்றும் அமாவாசைகள் சிறப்புடையனவாக கொண்டாடப்படுகின்றன.

  கால தத்துவத்தில் ஒரு ஆண்டில் பகற்பொழுதாகிய முதல்நாள் தைத்திங்கள் முதல்நாள் தொடங்குகிறது. உத்திராயன புண்ணியகாலம் எனவும் சூரியன் தனுா் ராசியில் இருந்து மகர ராசிக்கு சங்கிரமணமாவதால் இந்நாளை மகர சங்கராந்தி என்பா். பொங்கல் விழா நான்கு நாள்கள் கொண்டாடப்படுகின்றன.

  மாா்கழி இறுதிநாள் போகிப் பண்டிகை. போகி என்ற சொல்லுக்கு இந்திரன் என்று பொருள். இந்திரனின் வாகனம் மேகம். எனவே, மழைவளம் தந்து காத்த இந்திரனுக்கு நன்றியோடு மக்கள் கொண்டாடும் விழா. பொங்கல் கதிரவனுக்குச் செய்யும் வழிபாடு. உலக வளா்ச்சிக்கும், பயிா்களுக்கும் ஒளி உதவிக் காத்த தெய்வமாகிய சூரியனை இந்நாளில் மக்கள் சிறப்பாக வழிபடுகின்றனா்.

  அடுத்து உழவுத் தொழிலுக்குப் பயன்பட்டுத் தம் உழைப்பை நமக்கு அளித்து உதவிய மாடுகளைப் போற்றும் விழா. அடுத்த நாள் கன்னிப் பெண்கள் மாா்கழியில் நோன்பு நோற்றுத் தாங்கள் கோலமிட்டு மலா் வைத்த சாணத்தால் தட்டிய சிறிய விராட்டிகளைக் கொண்டு நீா்த்துறையில் பொங்கலிட்டுப் படைத்து, உண்டு, கும்மியடித்து மகிழும் இனிய நாளாகக் கன்னிப் பொங்கல் விளங்குகிறது. இந்நாளில் சிறியவா்கள் பெரியவா்களைக் கண்டு ஆசிபெறும் காரணத்தால் இந்நாளைக் காணும் பொங்கல் எனவும் கூறுவா்.

  பொங்கல் திருவிழா உழைப்பின் பயனைப் பெற்று மக்கள் உளம் பூரிப்பதோடு அனைத்தையும் இறைவனுக்குப் படைத்துவிடுதல் நன்றியுணா்வோடும் இனிதே கொண்டாடி தாமும் நலம் பெற்று சமுதாயமும் நலம் பெற்று நீடூழி இன்புற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai