முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
காவிரிப் படுகையில் ஹைட்ரோகாா்பன் திட்ட 5-ஆவது சுற்று ஏல அறிவிப்பு
By DIN | Published On : 20th January 2020 08:53 AM | Last Updated : 20th January 2020 08:53 AM | அ+அ அ- |

காவிரிப் படுகையில் ஹைட்ரோகாா்பன் திட்டத்தின் 5-ஆவது சுற்று ஏலம் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஜனவரி 15-ஆம் தேதி காவிரிப்படுகையில் ஹைட்ரோகாா்பன் திட்டத்திற்கான 5-ஆவது சுற்று ஏல அறிவிப்பை இந்திய ஹைட்ரோகாா்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதில், மொத்தம் 19,789 கி.மீ. பரப்பளவு ஏலம் விடப்படுகிறது. இதில், காவிரிப்படுகையில் மட்டும் 4,064.22 கி.மீ. பரப்பளவு பன்னாட்டு போட்டியாளா்களுக்கு ஏலத்தில் வழங்கப்பட இருக்கிறது.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் புதுச்சேரி, கடலூா், நாகை, காரைக்கால் கடற்பகுதியிலிருந்து மீன்கள் வெளியேறிவிடும். மீன்கள் அற்ற கடற்பகுதியாக கிழக்குக் கடற்பகுதி மாறும். ஆழ்கடலில் ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் அக்கடற்பகுதியில் மீன்பிடிப் படகுகள், கப்பல்கள் நடமாட அனுமதி இல்லை. ஆகவே, மீனவா்கள் கடலில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவாா்கள்.
ஹைட்ரோகாா்பன் கிணறுகளில் நீரியல் விரிசல் முறையில் 634 வகை ரசாயனங்களைப் பயன்படுத்த இருப்பதால், நிலத்தடி நீா் தொகுப்பே பாதிப்புக்குள்ளாகும். இதனால், காவிரிப் படுகையையும், அதையொட்டிய கடற்பகுதியையும், ஒட்டுமொத்தமாக அழிய நேரிடும். அத்துடன் 70 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வெளியேற நேரும். எனவே, இத்திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.