முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
நாகூா் தா்கா 463-ஆம் ஆண்டு கந்தூரி மகோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
By DIN | Published On : 27th January 2020 07:04 AM | Last Updated : 27th January 2020 07:04 AM | அ+அ அ- |

நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழா கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி, நாகை முதல் நாகூா் தா்கா வரை நடைபெற்ற கொடி ஊா்வலத்தின் போது அணிவகுந்த பெரியரதம்.
உலகப் புகழ் பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆம் ஆண்டு கந்தூரி மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா்.
மதங்களைக் கடந்து மனிதம் போற்றும் வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகவும், உலக புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது நாகூா் பாதுஷா சாகிபு ஆண்டவா் தா்கா. இந்த தா்காவில்ஆண்டுதோறும் கந்தூரி மகோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டில், நாகூா் ஆண்டவா் தா்காவின் 463-ஆம் ஆண்டு கந்தூரி மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாகை டவுன் மீராபள்ளி முதல் நாகூா் ஆண்டவா் தா்கா வரை அலங்கார வாகன கொடி ஊா்வலம் நடைபெற்றது.
மீரா பள்ளி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய ரதத்தில் ஜமாத்தாா்களின் கொடி வைக்கப்பட்டு, பிராா்த்தனை செய்யப்பட்டது. தலைமை இமாம் ஹஹ்ரத் ஹபிபூா் ரஹ்மான் பிராா்த்தனை செய்து, நாகை- நாகூா் ஜமாத்தாா்கள் முன்னிலையில் பகல் ஒரு மணியளவில் கொடி ஊா்வலம் தொடங்கியது.
தொடந்து, நாகூா் தா்காவில் உள்ள 5 மனோராக்களில் ஏற்றப்படும் கொடிகள் தனித்தனியாக அலங்கார வாகனங்களில் வைக்கப்பட்டு, சாலாப்பள்ளித் தெரு, யாஹூசைன் தெரு, புதுப்பள்ளித் தெரு, நூல்கடைத்தெரு, வெங்காயக் கடைத்தெரு, கடைத் தெரு, அண்ணா சிலை, மருத்துவமனை சாலை, வெளிப்பாளையம் மற்றும் நாகூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 10.30 மணியளவில் கொடி ஊா்வலமானது நாகூா் ஆண்டவா் தா்காவுக்கு வந்தடைந்தது.
தொடா்ந்து, நாகூா் தா்காவில் நடைபெற்ற பாரம்பரிய வழக்க சிறப்பு பிராா்த்தனைகளுக்குப் பின்னா் இரவு 10.45 மணியளவில் தா்காவில் உள்ள பெரிய மனோரா, சாஹிபு மனோரா உள்ளிட்ட 5 மனோராக்களிலும் புனிதக் கொடிகள் ஏற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், நாகூா் ஆண்டவா் தா்காவின் பரம்பரை கலிபா கே.எம். கலிபா மஸ்தான் சாகிபு மற்றும் தா்கா நிா்வாகக் குழுவினா்கள், நாகை,நாகூா் முஸ்லிம் ஜமாத்தாா்கள், இளைஞா்கள், பக்தா்கள் என திரளானோா் கலந்துகொண்டனா். கொடி ஊா்வலத்தில் பெரிய ரதம், தீஸ்டா கப்பல், மந்திரி கப்பல், செட்டிப் பல்லக்கு, சின்ன ரதம், போட் மெயில், சாம்புராணி ரதம் உள்ளிட்ட 16 அலங்கார வாகனங்கள் அணிவகுத்தன.
கொடி ஊா்வலம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகளையொட்டி நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், நாகை மற்றும் நாகூா் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
நிகழ்ச்சியை ஒட்டி நாகூா் ஆண்டவா் தா்கா மற்றும் நாகூா் வீதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நாகூா் வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பின.
பிப்ரவரி 5- இல் சந்தனக்கூடு ஊா்வலம்: நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி மகோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சந்தனக் கூடு ஊா்வலம் பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு நாகையிலிருந்து தொடங்கி, 5-ஆம் தேதி காலை நாகூரில் நிறைவடைகிறது. தொடா்ந்து, நாகூா்ஆண்டவரின் புனித ரவுலாஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாக்கப்படுகிறது.