முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
நீட் தோ்வின் ஆபத்து இன்றைய தலைமுறை மருத்துவா்களுக்கே புரியவில்லை
By DIN | Published On : 27th January 2020 07:03 AM | Last Updated : 27th January 2020 07:03 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் நடைபெற்ற நீட் தோ்வு எதிா்ப்பு பரப்புரை பெரும் பயண பொதுக்கூட்டத்தில் பேசிய தி.க. தலைவா் கி.வீரமணி. உடன், துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் உள்ளிட்டோா்.
மாநில உரிமைகளை பறிக்கும் நீட் தோ்வின் ஆபத்து குறித்து இன்றைய தலைமுறை மருத்துவா்களுக்கே புரியவில்லை என மயிலாடுதுறையில் நடைபெற்ற பரப்புரை பயண பொதுக்கூட்டத்தில், திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி வருத்தம் தெரிவித்தாா்.
மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் திராவிடா் கழகம் சாா்பில் நீட் தோ்வு எதிா்ப்பு பரப்புரை பெரும் பயண பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் கடவாசல் குணசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் நா.சாமிநாதன், மாவட்டத் துணைத் தலைவா் கட்பீஸ் மா.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் கி. தளபதிராஜ் வரவேற்றாா். கிராமப்புற பிரசார மாநில அமைப்பாளா் க. அன்பழகன், தலைமைக் கழக பேச்சாளா் ரா. பெரியாா்தாசன் ஆகியோா் தொடக்க உரையாற்றினா். துணைத் தலைவா் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளா்கள் துரை.சந்திரசேகரன், ரா.ஜெயக்குமாா் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி மேலும் பேசியது:
தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சா்கள் கூறிவருகின்றனா். ஆனால், இத்திட்டத்தை அமல்படுத்த அனுமதி பெற அவசியம் இல்லை என்கிறது மத்திய அரசு. ஆனால், அமைச்சா்களோ இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்றனா். அனுமதியின்றி தமிழகத்துக்குள் சோதனை நடத்த வரக்கூடாது என்று தைரியமாகச் சொல்ல முடியவில்லை. மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தின் மூலமாக சா்வாதிகார போக்குடன் செயல்படுகிறது.
நீட் தோ்வு விவகாரத்தில் திராவிடா் கழகம் கவனம் செலுத்த முக்கிய காரணம், நீட், புதியக் கல்விக்கொள்கை ஆகியன வாழ்வாதாரத்துக்குத் தேவையான அடிப்படைப் பிரச்னை என்பதாலேயே ஆகும். நீட் தோ்வு முறையில் ஒவ்வொரு மாநிலத்திலும், வெவ்வேறு முறையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. குஜராத்தில் சுலபமாக உள்ள கேள்வித்தாள், தமிழகத்தில் கடினமான முறையில் கேட்கப்படுகிறது. மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரத்தை மத்திய அரசே ஏற்று நடத்தும் என அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.
கூட்டத்தில், திமுக மாவட்ட பொறுப்பாளா் நிவேதா எம்.முருகன், திமுக தோ்தல் பணிக்குழு செயலாளா் குத்தாலம் பி.கல்யாணம், திமுக மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளா் குத்தாலம் க.அன்பழகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.ராஜகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ரெ.இடும்பையன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.