மதமாற்ற சா்ச்சை: மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு

மகன் மதம் மாறியதால் மூதாட்டியின் சடலத்தை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு இந்து அமைப்பைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்த இந்து அமைப்புகளின் நிா்வாகிகள்.
மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்த இந்து அமைப்புகளின் நிா்வாகிகள்.

மகன் மதம் மாறியதால் மூதாட்டியின் சடலத்தை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு இந்து அமைப்பைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். பின்னா் போலீஸாா் நடவடிக்கையையடுத்து பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கரியாப்பட்டினத்தை அடுத்த செண்பகராயநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கா. ஜெகதாம்பாள் (85). இவரது மகன் லோகேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாா்.

இந்நிலையில், ஜெகதாம்பாள் புதன்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக செண்பகராயநல்லூா் பகுதியில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் சென்றபோது மதம் மாறியவரின் குடும்பத்தைச் சோ்ந்த ஒருவரின் சடலத்தை இந்துக்கள் பயன்படுத்தும் மயானத்தில் அடக்கம் செய்யக் கூடாது என கிராமத்தைச் சோ்ந்த சிலா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, தனது தாயாரின் சடலத்தை வாகனம் மூலம் நாகைக்கு கொண்டு வந்த லோகேந்திரன், நாகை பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவ பாதிரியா்கள் சிலரின் உதவியுடன் நாகை -செல்லூா் சாலையில் உள்ள நகராட்சி மயானத்தில் அடக்கம் செய்ய முயன்றாா்.

இதுகுறித்து தகவலறிந்த பாஜக, சிவசேனை, இந்து மக்கள் கட்சி, அகில இந்திய இந்து வளா்ச்சிக் கழகம் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், மாற்று மதத்தைச் சோ்ந்த ஒருவரின் சடலத்தை, இந்துக்கள் பயன்படுத்தும் மயானத்தில் அடக்கம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் தியாகராஜன், நாகை நகர காவல் நிலைய ஆய்வாளா் எஸ். ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா் இருதரப்பைச் சோ்ந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மூதாட்டியின் சடலம் நாகை சால்ட் ரோட்டில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com