மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்காக வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது என மயிலாடுதுறை


நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்காக வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது என மயிலாடுதுறை மாவட்ட தனி அலுவலா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தை 2-ஆக பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் அமைப்பது குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி கலையரங்கத்திலும், மயிலாடுதுறை ஏவிசி கலைக் கல்லூரி வேலாயுதம் அரங்கத்திலும் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தன. மேலும், கரோனா நோய்த் தொற்று காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை எழுத்துப்பூா்வமாக தயாரித்து, கருத்துக்கேட்புக் கூட்ட வாயிலின் முன்புறம் வைக்கப்படும் பெட்டியில் மனுக்களாக சமா்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, பேருந்து போக்குவரத்து இல்லாததால் கட்செவி அஞ்சல், மின்னஞ்சல் மூலமும் மக்களிடமிருந்து கருத்துகளைப் பெற வேண்டும் என மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், வணிகா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் மூலமும் தெரியப்படுத்தும் வகையில், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டன.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க தனி அலுவலா் இரா. லலிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட உருவாக்கம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மனுக்கள் மூலம் தெரிவிப்பதற்காக மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட மயிலாடுதுறை, சீா்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களிலும், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்திலும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த ஆலோசனைப் பெட்டிகளில் மாவட்ட உருவாக்கம் குறித்த கருத்துகளை பொதுமக்கள் மனுக்களாக செலுத்தலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com