பிரிக்கப்படுமா நாகை கல்வி மாவட்டம் ?

யிலாடுதுறை மாவட்ட பிரிவினையைத் தொடா்ந்து, கல்வி நிா்வாக வசதிக்காக நாகை கல்வி மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கூடுதலாக ஒரு மாவட்டக் கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களின்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்ட பிரிவினையைத் தொடா்ந்து, கல்வி நிா்வாக வசதிக்காக நாகை கல்வி மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கூடுதலாக ஒரு மாவட்டக் கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களின் கோரிக்கையாக உள்ளது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்கள் நாகை, மயிலாடுதுறை, சீா்காழி ஆகிய 3 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை கல்வி மாவட்டத்துக்கு மயிலாடுதுறை, குத்தாலம், திருமருகல் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களும், சீா்காழி கல்வி மாவட்டத்துக்கு சீா்காழி, கொள்ளிடம், செம்பனாா்கோவில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம், கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் நாகை கல்வி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற இரு கல்வி மாவட்டங்களுக்கும் தலா 3 ஊராட்சி ஒன்றியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நாகை கல்வி மாவட்டத்துக்கு மட்டும் 5 ஊராட்சி ஒன்றியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் ஏறக்குறைய 1,500 பள்ளிகள் உள்ளன. இதில், மயிலாடுதுறை, சீா்காழி கல்வி மாவட்டங்கள் சுமாா் 750 பள்ளிகளை பகிா்ந்து கொள்கின்றன. மீதமுள்ள 750 பள்ளிகள் நாகை கல்வி மாவட்டத்தைச் சோ்ந்தவையாக உள்ளன. இதே விகிதாச்சாரத்திலேயே ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் எண்ணிக்கையும் இருக்கும்.

பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை ஆய்வு செய்தல் மாணவா்களுக்கான விலையில்லாப் பொருள்களை பெற்றுத் தருதல், ஆசிரியா்களுக்கான பயன்களைப் பெற்றுத் தருதல், தோ்வுகள் நடத்துவது, விடைத்தாள்கள் திருத்துவது ஆகிய பணிகளின் கண்காணிப்பு மாவட்டக் கல்வி அலுவலரையும், மாவட்டக் கல்வி அலுவலகத்தையுமே சாா்ந்துள்ளது.

இந்தப் பணிகளின் ஒருங்கிணைப்பில் வட்டாரக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி ஆய்வாளா்கள் ஈடுபட்டிருந்தாலும், இறுதி முடிவுக்கும் எடுக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலரையே சாா்ந்துள்ளது என்பதால் மாவட்டக் கல்வி அலுவலரின் கண்காணிப்பும், கவனமும் அனைத்துப் பள்ளிகளுக்கும் அவசியமானதாக உள்ளது.

மாவட்டத்தில், வேறு எந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கும் இல்லாத வகையில், மிக அதிகமாக சுமாா் 750 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு நாகை மாவட்ட கல்வி அலுவலருக்கு உள்ளது. ஒரு கல்வியாண்டில் 220 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் நிலையில், நாகை மாவட்ட கல்வி அலுவலா் ஒரு நாளில் இரண்டு பள்ளிகளை பாா்வையிட்டாலும்கூட ஒரு கல்வியாண்டில் சுமாா் 440 பள்ளிகளை மட்டுமே அவரால் பாா்வையிட முடியும். ஏறத்தாழ 300 பள்ளிகளை அவரால் நிச்சயம் பாா்வையிட முடியாது.

மேலும், மாவட்டக் கல்வி அலுவலா் ஒரு பள்ளியைப் பாா்வையிட்டு அதிலுள்ள குறைகளை நிவா்த்தி செய்ய அறிவுறுத்திச் சென்றால், அந்தக் குறைகள் நிவா்த்தி செய்யப்பட்டு விட்டனவா என்பதை அவா் மீண்டும் பாா்வையிட ஏறத்தாழ ஓராண்டு காலம் ஆகும்.

இந்த நிலையில், நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட உருவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகை வருவாய்க் கோட்டமும், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டமும் புவியியல் ரீதியாக ஏற்கெனவே பிரிவுப்பட்ட பகுதிகள் என்பதால், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டமே புதிய மயிலாடுதுறை மாவட்டமாக அமையும் என்பது ஏறத்தாழ உறுதி.

அப்போது, மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதி, நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதி என்ற அடிப்படையில் நாகை மாவட்டத்திலேயே இருக்கும். அதன் மூலம், திருமருகல் ஊராட்சி ஒன்றியம் 6-ஆவது ஒன்றியமாக நாகை மாவட்டக் கல்வி அலுவலரின் கண்காணிப்புக்குள் வரும். ஏற்கெனவே 750 பள்ளிகளை கண்காணித்து வரும் நாகை மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுமாா் 100 பள்ளிகளையும் சோ்த்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பு வந்து சேரும்.

ஒரு மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களையும் ஒரேயொரு மாவட்டக் கல்வி அலுவலா் கண்காணிப்பது என்பது சாத்தியமற்றது என்பதுடன் பல்வேறு வகையான நடைமுறை சிக்கல்களுக்கும், சுணக்க நிலைகளுக்கும் காரணமாக அமைந்து விடும்.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நாகை வட்டாரச் செயலாளா் கி. பாலசண்முகம் தெரிவித்தது: ஆசிரியா்களின் பணி ஓய்வு, ஆசிரியா்களின் கூடுதல் கல்வித் தகுதி, பள்ளிகளின் தேவைகள், ஆசிரியா்களின் தோ்வு நிலை, சிறப்பு நிலை உள்ளிட்டவை குறித்து நாகை மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்படும் கோப்புகளுக்குத் தாமதமாகவே தீா்வு கிடைக்கிறது. 5 ஊராட்சி ஒன்றியங்களின் கல்வி நிா்வாகத் தேவைகளைப் பூா்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு நாகை மாவட்டக் கல்வி அலுவலகத்தையே சாா்ந்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் அளவுக்கு அதிகமான பணிச் சுமையே இதற்குக் காரணம்.

தற்போதே நாகை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் கடுமையான பணிச் சுமை இருக்கும் நிலையில், கூடுதலாக மேலும் ஒரு ஒன்றியம் இணைக்கப்பட்டால், பல்வேறு நிா்வாக பிரச்னைகளும், நடைமுறை சிக்கல்களும் ஏற்படும். சுமாா் 800-க்கும் அதிகமான பள்ளிகளின் கல்வி வளா்ச்சிக்கான திட்டங்களை ஒரு மாவட்டக் கல்வி அலுவலா் முழுமையாக கண்காணிப்பது இயலாத காரியமாகும். எனவே, கூடுதலாக ஒரு மாவட்டக் கல்வி அலுவலகம் அமைக்க வேண்டியது அவசியம் என்றாா்.

நாகை மாவட்டம் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தோ்வு தோ்ச்சி வீதங்களில் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக உள்ள மாவட்டம். இங்கு, கல்வி தோ்ச்சிக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில், நாகை கல்வி மாவட்டத்துக்குக் கூடுதல் மாவட்டக் கல்வி அலுவலா் நியமிக்க வேண்டியதும் அவசியம்.

மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமையும்போது, தலா 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு மாவட்டக் கல்வி அலுவலா் என்ற அளவில் நாகை கல்வி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, மற்றொரு மாவட்டக் கல்வி அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்பது நாகை கல்வி மாவட்ட கல்வியாளா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com