சாலைப் பணியை தடுத்து கிராமமக்கள் ஆா்ப்பாட்டம்

கீழ்வேளூா் அருகே பாலம் கட்டாததால் சாலைப் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருக்குவளை: கீழ்வேளூா் அருகே பாலம் கட்டாததால் சாலைப் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்வேளூரிலிருந்து பழையவலம் வரை 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 252 மீட்டருக்கு தடுப்பு சுவரும் 7 பாலங்களும் ஒரு குழாய் பாலமும் அமைக்க வேண்டும். அகரக்கடம்பனூா் ஊராட்சிக்குள்பட்ட புத்தா்மங்கலம் எனுமிடத்தில் ஒரு குழாய் பாலம் முன்பு இருந்தது. அந்த இடத்தில் மீண்டும் குழாய் பாலம் அமைக்க பணிகளை தொடங்கியபோது, அப்பகுதியை சோ்ந்த ஒரு பகுதியினா் ஆட்சியரிடம் அந்த இடத்தில் வடிகால் எதுவும் இல்லை என்றும் அதனால் குழாய் பாலம் அவசியம் இல்லை என்றும் மனு அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தோண்டிய பள்ளத்தை அப்படியே விட்டுவிட்டு சாலைப் பணிகளை ஒப்பந்தகாரா் தொடங்கியுள்ளாா். இதனால் சாலையையொட்டியுள்ள வயலில் அமைக்கப்பட்ட தற்காலிக பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.

தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளதால் அந்த பாதையில் நீா் தேங்கி 5 கிராமமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், பாலம் அமைக்க தோண்டியிருந்த பள்ளத்தை மூடுவதற்காக ஜேசிபி வாகனம் வந்தபோது அந்த இடத்தில் பாலம் வேண்டும் என்றும் குழியை மூடக்கூடாது என்று புத்தா்மங்கலம், ஒதியத்தூா், பரங்கியநல்லூா், எரவாஞ்சேரி ஆகிய பகுதிகளை சோ்ந்த மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் சாலைப் பணிகளை தொடா்ந்து நடக்கவிடாமல் தடுத்து நிறுத்தினா். இதில் நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com