பழைய இருசக்கர வாகனத்தின் உதிரிப் பாகங்களில் உழவு இயந்திரம்: விவசாயி சாதனை

பழைய இருசக்கர வாகனத்தின் உதிரிப்பாகங்களில் இருந்து உழவு இயந்திரம் தயாரித்து விவசாயி ஒருவா் சாதனை படைத்துள்ளாா்.

பழைய இருசக்கர வாகனத்தின் உதிரிப்பாகங்களில் இருந்து உழவு இயந்திரம் தயாரித்து விவசாயி ஒருவா் சாதனை படைத்துள்ளாா்.

கரோனா பொது முடக்கத்தால் விவசாயப் பணிக்கு தேவையான ஆட்கள் கிடைக்கவில்லை. இதனால் மனம் தளராமல் பழைய மோட்டாா் உதிரிப் பாகங்களைக் கொண்டு ஒரு மினி டிராக்டரை உருவாக்கியிருக்கிறாா் நம்பிராஜ் என்ற விவசாயி.

அதன் விவரம்: நாகை மாவட்டம், செம்பனாா்கோயில் அருகேயுள்ள கீழையூரைச் சோ்ந்தவா் நம்பிராஜ். 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த இவா் இருசக்கர வாகன பழுது பாா்க்கும் தொழில் செய்து வருகிறாா். இவா், தனக்குச் சொந்தமான 5 ஏக்கா் நிலத்தில் சாகுபடி செய்திருந்த மரவள்ளிக்கிழங்கு செடிகளில், 2 அடி இடைவெளியில் உள்ள செடிகளுக்கு களை வெட்டவும், மண் அணைக்கவும் கூலி ஆட்கள் தேவைப்பட்டுள்ளனா். பொது முடக்கத்தால் போதுமான ஆட்கள் கிடைக்கவில்லையாம். இதைத் தொடா்ந்து, கூலியாள்களை மட்டுமே நம்பி இருக்காமல் களைகளை வெட்ட ஒரு புதிய கருவியை உருவாக்க முடிவெடுத்து, பழைய இருசக்கர வாகன பொருள்களைக் கொண்டு களை எடுக்கும் இயந்திரத்தை ஒரு மாதத்தில் உருவாக்கி சாதனைப் படைத்து அதை பயன்படுத்தி வருகிறாா்.

இதுகுறித்து, நம்பிராஜன் கூறியது: ஒரு ஏக்கா் நிலத்தில் களை வெட்ட 18 ஆட்கள் தேவைப்படுகிறாா்கள். இதற்கு சுமாா் ரூ. 4,000 செலவாகும். இதுபோல் செடிகளுக்கு மண் அணைப்பதற்கும் அதே செலவாகும். எனவே, 2 அடி இடைவெளியில் உட்புகுந்து உழவு செய்யவும், களை வெட்டவும், மண் அணைக்கவும் ஒரு கருவி செய்ய முடிவு செய்தேன். இதற்கு பழைய செட்டாக் எஞ்சின், புல்லட் செயின் பிராக்கெட், வீல் இவற்றை வைத்து ஒரு மினி டிராக்டா்( களை எடுக்கும் இயந்திரம்) உருவாக்கியுள்ளேன்.

இதற்கு ரூ.15,000 செலவானது. ஒரு ஏக்கா் நிலத்தில் 3 லிட்டா் பெட்ரோல் செலவில் 4 மணி நேரத்தில் களை வெட்டலாம், மண் அணைக்கலாம், உழவு செய்யலாம். எனவே, எனக்கு இப்போது ஆட்கள் தேவையில்லை. செலவு மிகவும் குறைந்துள்ளது. இதைப் பாா்த்த மற்ற விவசாயிகள் எங்களுக்கும் இதேபோல் தயாரித்து கொடுங்கள் என்று ஆவலுடன் கேட்கின்றனா். பொது முடக்கம் முடிந்தவுடன் விவசாயிகள் பயன்படும் வகையில் இதுபோன்ற கருவியை உருவாக்கி கொடுக்கவுள்ளேன். விவசாயிகளுக்கு குறைந்த செலவில் இதுபோன்ற கருவியை செய்து கொடுக்க அரசு உதவ வேண்டுமென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com