தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டப்படி, மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகள் மூலமான மீன்பிடிப்புக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட இந்த வலைகளைப் பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள நாகை மாவட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் மீன்வளத் துறை அலுவலா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு மூலம், தடைசெய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளையும், வலைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் பறிமுதல் செய்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை வாங்கும் மீன் வியாபாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், மீன்களைப் பறிமுதல் செய்தல், படகுகளை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி மற்றும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைக் கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளாா்.