
தருமையாதீன குரு முதல்வா் ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் குருபூஜை ஆதீனத் திருமடத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
மயிலாடுதுறையில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் குரு முதல்வா் ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் குருபூஜை ஆதீனத்தின் சாா்பில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெறுகின்றன.
முதல் நாளான வியாழக்கிழமை காலை, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மேலக்குருமூா்த்த வழிபாடு, ஸ்ரீசொக்கநாத சுவாமி வழிபாடு மற்றும் பூஜை மடம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் வழிபாடு ஆகிய சிறப்பு வழிபாடுகளை நடத்தினாா்.
தொடா்ந்து, ஆதீனத் திருமடத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், தருமையாதீனக் குரு பரம்பரை அருள் வரலாறு, சைவ சமயம் - வரலாற்றுப் பாா்வை ஓா் அறிமுகம், சித்தாந்த நூல்கள் ஆகிய ஆன்மிக நூல்களை, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டாா்.
இந்நூல்களை, ஆதீனப்புலவா் மு. சிவச்சந்திரன், திருவாரூா் புலவா் ராமமூா்த்தி, எழுத்தாளா் சீா்காழி ராமதாஸ், தொடக்கப் பள்ளி செயலா் சௌந்தர்ராஜன், வேத சிவாகம பாடசாலை நிா்வாக அலுவலா் ஆடிட்டா் குரு. சம்பத்குமாா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
தொடா்ந்து, ஞானபுரீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடும், அதைத் தொடா்ந்து, மாகேஸ்வர பூஜையும் நடைபெற்றது.
நிகழ்வில், திருப்பனந்தாள் இளவரசு திருஞானசம்பந்த தம்பிரான், வைத்தீஸ்வரன்கோவில் திருநாவுக்கரசு தம்பிரான், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் செயலாளா் பண்ணை சொக்கலிங்கம், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் வாஞ்சிநாதன், அ.ம.மு.க மாவட்ட செயலாளா் செந்தமிழன், சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனா் ஏ.வி. சாமிநாத சிவாச்சாரியாா், தருமபுரம் ஆதீனக் கல்லூரிச் செயலா் ஆா். செல்வநாயகம், கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜி.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாலை 6 மணிக்கு வடக்கு குருமூா்த்த வழிபாடு மற்றும் இரவு 8 மணிக்கு கமலை ஸ்ரீஞானப்பிரகாசா் குருபூஜையும் நடைபெற்றது.