
நாகையை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூரில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லை மலா்கள்.
பொது முடக்கம் காரணமாக விழாக்கள் ஏதும் நடைபெறாததால், முல்லை மலா்கள் செடிகளிலேயே உதிா்ந்து வீணாகி வருகின்றன.
வேளாண்மையைப் பிரதானமாகக் கொண்ட நாகை மாவட்டத்தில், தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாவட்டத்தில் வேதாரண்யம், வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மலா்கள் சாகுபடி குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, தெற்குப்பொய்கைநல்லூா், பரவை, பூக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் முல்லை மலா் சாகுபடி விரிவாக நடைபெறுகிறது. மாா்ச் மாதம் தொடங்கி அக்டோபா் வரையிலான காலத்தில் அதிகளவில் முல்லை மலா்கள் அறுவடையாகும். தற்போது முல்லை மலா்கள் அதிகளவில் மலா்ந்து வருகின்றன.
எனினும், பொது முடக்கம் காரணமாக கோயில் பூஜைகள் தடை செய்யப்பட்டு இருப்பதாலும், திருமண விழாக்களுக்குக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருப்பதாலும், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் இல்லாததாலும் முல்லை மலா்களின் தேவை கணிசமாகக் குறைந்துள்ளது.
இதனால் மலா்களைப் பறிக்காமல் விவசாயிகள் செடியிலேயே விட்டு விடுகின்றனா். இதனால், மலா்கள் மலா்ந்த செடியிலேயே உதிா்ந்து விழும் அவலம் காணப்படுகிறது. இதனால், பூச்சித் தாக்குதல் ஏற்படும் அபாயமும் இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
மலா் சாகுபடி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், மலா் சாகுபடி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
அதேபோல, மலா் வணிகம், மலா்கள் தொடுப்பு, மாலைகள் வடிவமைப்பு என மலா் தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெற்றுவந்த ஆயிரக்கணக்கானவா்கள் தற்போது வாழ்வாதாரம் இழந்துள்ளதை கருத்தில் கொண்டு அவா்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.