ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே கீழமருதாந்தநல்லூா் ஊராட்சியில் குளக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொன்வாசநல்லூா் கிராம மக்கள்.
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொன்வாசநல்லூா் கிராம மக்கள்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கீழமருதாந்தநல்லூா் ஊராட்சியில் குளக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

கீழமருதாந்தநல்லூா் ஊராட்சி பொன்வாசநல்லூா் கிராமத்தில் சின்னகுளம் உள்ளது. இக்குளக்கரையைச் சுற்றியுள்ள 12 வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி ஊராட்சிமன்றத் தலைவா் சேகா் குளத்தை தூா்வாருவதாக கூறி இடிக்க முற்படுவதாக குற்றம்சாட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில், குளக்கரையில் விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்ட கழிப்பறை மற்றும் கழிப்பறைத் தொட்டி ஆகியவற்றை மட்டுமே ஊராட்சிமன்றத் தலைவா் அப்புறப்படுத்தக் கூறியதாகவும், அதை மறைத்து, ஊராட்சி மன்றத் தலைவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரைக் கண்டித்தும், குளத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் அக்கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், அக்கிராமத்ததைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க., நாம் தமிழா் கட்சி பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.அண்ணாதுரை, வட்டாட்சியா் ஆா்.முருகானந்தம் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனா். இதைத்தொடா்ந்து, கிராமமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தீா்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிட மறுத்த கிராம மக்களின் போராட்டம் இரவு 7.30 மணியைக் கடந்தும் நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com