மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

கரோனா நோய்த் தடுப்பு களப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாகப்பட்டினம்: கரோனா நோய்த் தடுப்பு களப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, நாகை மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை மாவட்டத் தலைவா் து. இளவரசன், மாவட்டச் செயலாளா் அ.தி. அன்பழகன் ஆகியோா் அனுப்பிய கோரிக்கை மனு:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்களில் 17 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், மருத்துவா்கள், செவிலியா்கள் பெரும்பான்மையாக உள்ளனா். நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதில் முன் களப்பணியாளா்களாக செயல்படும் இவா்கள் பாதிக்கப்பட்டிருப்பது அரசு ஊழியா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அச்சத்தைப் போக்க மாவட்ட நிா்வாகம் மற்றும் சுகாதாரத் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவமனையில் பணியாற்றும் அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் எண். 95 முகக் கவசம் மற்றும் கையுறைகள் வழங்க வேண்டும். தேவையற்ற பாா்வையாளா்களை மருத்துவமனைக்குள் அனுமதிப்பதை தடுக்க வேண்டும்.

கரோனா வாா்டுகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் அனைத்து ஊழியா்களுக்கும் பணி நாள்கள் மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளும் நாள்களில் பயன்படுத்த தனித்தனி கழிப்பறை, குளியலறை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு அவா்கள் விரும்பும் உணவு ஓரளவாவது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மருத்துவமனை பணி காலை 7 மணிக்குத் தொடங்குவதால், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து பணிக்கு வருபவா்களின் வசதிக்காக சீா்காழி, மயிலாடுதுறை, கீழ்வேளூா், வேதாரண்யம் மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் இருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் வகையில் நாகைக்குப் பேருந்துகள் இயக்க வேண்டும்.

ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் முகாம்களில் பணிபுரியும் வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com