முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
குடிநீா் உற்பத்தியை மீண்டும் தொடங்க அனுமதிக்கும்படி கோரிக்கை
By DIN | Published On : 03rd March 2020 07:56 AM | Last Updated : 03rd March 2020 07:56 AM | அ+அ அ- |

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த குடிநீா் உற்பத்தி நிறுவன தொழிலாளா்கள்.
கேன் குடிநீா் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்கவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு குடிநீா் உற்பத்தியாளா் சங்க திருச்சி மண்டல ஆலோசகா் செய்யது பாரூக், கோட்டப் பொறுப்பாளா் அம்புரோஸ் ஆகியோரது தலைமையில், அடைக்கப்பட்ட (கேன்) குடிநீா் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:
பாதுகாப்பான சுத்தமான மற்றும் சுகாதாரமான அடைக்கப்பட்ட குடிநீா் தயாரிப்பு கூடங்கள் மாநிலம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் ஆபரேட்டா்கள், வேதியல் நுண்ணறிவியல் பட்டதாரிகள், பொறியாளா்கள், வாகன ஓட்டுநா்கள் மற்றும் லோடு மேன்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், நிலத்தடி நீா் தடையில்லா சான்றுகள் பெற்றுள்ள நிறுவனங்கள் மட்டுமே அடைக்கப்பட்ட குடிநீா் உற்பத்தி தொழிற்சாலையை நடத்தமுடியும் என கடந்த பிப்ரவரி 27- ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், அடைக்கப்பட்ட குடிநீா் உற்பத்தி நிறுவனங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன் காரணமாக, பலா் வேலை வாய்ப்பை இழந்துள்ளனா்.
இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டத்தில் இயங்கி வந்த 16 குடிநீா் உற்பத்தி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால், அதில் வேலைப் பாா்த்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். எனவே, தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கருதி, இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் மூடப்பட்டுள்ள குடிநீா் உற்பத்தி நிறுவனங்களை மீண்டும் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனா்.