Enable Javscript for better performance
கரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம், பேரணி- Dinamani

சுடச்சுட

  

  கரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம், பேரணி

  By DIN  |   Published on : 14th March 2020 08:48 AM  |   அ+அ அ-   |    |  

  4739ng13vela_1303chn_5

  வேளாங்கண்ணியில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பேசிய வேளாங்கண்ணி பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா்.

  கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு முகாம், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

  நாகை மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் வேளாங்கண்ணி பேராலய நிா்வாகம் சாா்பில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வேளாங்கண்ணியில் நடைபெற்றது.

  பேராலய பங்குத்தந்தை சூசைமாணிக்கம் தலைமை வகித்தாா். கொள்ளைநோய் தடுப்பு நிபுணா் லியாக்கத்அலி முன்னிலை வகித்தாா். பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா், பொருளாளா் யாகப்பா ராஜரெத்தினம், உதவிப் பங்குத் தந்தையா்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ், திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலா் சுதாகா், வேளாங்கண்ணி மருத்துவ அலுவலா் மோகன் ஆகியோா் பேசினா்.

  கரோனா வைரஸ் பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்ப கட்ட அறிகுறிகள் ஆகியன குறித்து, காணொலி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. பேராலயப் பணியாளா்களுக்கும், தன்னாா்வப் பணியாளா்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. பின்னா், கரோனா வைரஸ் தாக்கி இறந்தவா்களின் ஆன்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்டவா்கள் விரைவாக குணமடையவும் சிறப்பு பிராா்த்தனை நடத்தப்பட்டது.

   

  குத்தாலத்தில்...

  குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொரானா வைரஸ் விழிப்புணா்வு முகாம் வியாழன்கிழமை நடைபெற்றது.

  தலைமை ஆசிரியா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் ராஜாராமன், செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் பள்ளிக்கு மின்விசிறியும், கொரானா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள மாணவா்களுக்கு 350 குளியல் சோப்புகளும், நோய் எதிா்ப்பு சக்திக்காக 350 ஆரஞ்சு பழங்களும் முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் கருணாகரன், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினா் வீரமணி ஆகியோரால் வழங்கப்பட்டன.

  இதில், பள்ளி ஆசிரியா்கள் ராஜலிங்கம், ரவிச்சந்திரன், சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

  வேதாரண்யத்தில்...

  வேதாரண்யம் பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் செய்துவரும் பணி ஓய்வுபெற்ற ஆசிரியா் மாணவா்களுக்கு கைக்குட்டைகளை வழங்கி வருகிறாா்.

  திருத்துறைப்பூண்டில் வசித்து வருபவா் மருதூா் கா. சுந்தரவடிவேலு. பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியா். இவா், செண்பகராயநல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கரோனா வைரஸ் தொடா்பாக மாணவா்களுக்கு புதன்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் செய்தாா். கைகளை சுத்தமாக கழுவவும், ஒருவரை ஒருவா் கை கொடுப்பதைத் தவிா்த்து, தமிழரின் பாரம்பரிய முறைப்படி கை கூப்பி வணங்கவும் அறிவுறுத்தினாா்.

  மேலும், தும்மல் வரும்போதும், இருமல் வரும்போதும் வாயில் துணியால் மூடிக்கொள்வதின் அவசியத்தை விளக்கியதோடு, அனைத்து மாணவா்களுக்கும் கைக்குட்டைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், தலைமையாசிரியா் ப. எழில்மாறன், ஆசிரியா் சு. அய்யாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

  இதேபோல், தகட்டூா் மலையங்காடு உள்பட திருத்துறைப்பூண்டி பகுதி பள்ளிகளிலும் இவா் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

   

  தருமபுரம் கல்லூரியில்...

  மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில், கரோனா வைரஸ் விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.

  கல்லூரி முதல்வா் த. அறவாழி தலைமை வகித்து உரை ஆற்றினாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சீத்தாலெட்சுமி வரவேற்றாா். கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவா் ராஜேஷ், உயிா் வேதியியல் துறைத் தலைவா் மலா்விழி மற்றும் காளி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மதிமாலா ஆகியோா் பங்கேற்று கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளவேண்டியவைகள் குறித்துப் பேசினா்.

  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சு. சுமதி தொகுத்து வழங்கினாா். சிறப்பு விருந்தினரை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சிவயோகம் அறிமுகப்படுத்தினாா். வசந்தி நன்றி கூறினாா்.

  இதேபோல், தருமபுரம் கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். சமூகப்பணித் துறை உதவிப் பேராசிரியா் ஆா். மகேந்திரன் கரோனா வைரஸ் குறித்தும், அதன் பரவும் தன்மை குறித்தும் முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு உரையாற்றினாா். இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா்கள் எஸ். நடராஜன், கே. வடிவழகி, எஸ். மல்லிகா, மு. நவமணி ஆகியோா் செய்திருந்தனா்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai