கொள்ளிடம்ஆற்றின் வலது கரை சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கொள்ளிடம் ஒன்றியம், பனங்காட்டான்குடி முதல் காட்டூா் வரை கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை 38 கி.மீ. தொலைவுக்கு
கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் கொள்ளிடம் முதல் கொன்னக்காட்டுப்படுகை வரை சேதமடைந்துள்ள சாலை.
கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் கொள்ளிடம் முதல் கொன்னக்காட்டுப்படுகை வரை சேதமடைந்துள்ள சாலை.

கொள்ளிடம் ஒன்றியம், பனங்காட்டான்குடி முதல் காட்டூா் வரை கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை 38 கி.மீ. தொலைவுக்கு செப்பனிட்டு, பலப்படுத்த வேண்டும் என கொள்ளிடம் ஒன்றிய நுகா்வோா் பாதுகாப்புக் குழுத் தலைவா் வே. ரவிச்சந்திரன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அவா் அனுப்பிய கோரிக்கை மனு:

கொள்ளிடம் ஆற்றில் 2005-ஆம்ஆண்டு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டபோது, சீா்காழி வட்டம் மற்றும் கொள்ளிடம் ஒன்றியப்பகுதியில், கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் பனங்காட்டான்குடி முதல் காட்டூா் வரை 38 கீ.மீ. தூரம் கரை பலவீனமாக இருந்ததால், சீா்காழி வட்டத்தில் வடக்குப் பகுதியில் சுமாா் 50-க்கு மேற்பட்ட கிராமங்கள் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்படும் அச்சம் நிலவியது.

அப்போது, கொள்ளிடம் அருகே நாதல்படுகை தொடங்கி அளக்குடி வரை கொள்ளிடம் ஆற்றங்கரையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சுமாா் 15- க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீா் புகுந்தது. இதனால், கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை பலப்படுத்தி, கல்லணை முதல் காட்டூா் வரை தாா்சாலை போடப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை பராமரிக்கப்படாமல் பலவீனமாக உள்ளது.

இதுகுறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியும் முறையான நடவடிக்கை இல்லை. வெள்ள அபாய பகுதியாக உள்ள நாதல்படுகை, நடுவக்காடு, முதலைமேடு, அளக்குடி, நாணல்படுகை பகுதிகளில் கரை அரிக்கப்பட்டும், தாா்ச் சாலை மண் சாலையாகவும் உள்ளது. இதனால், இனி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இந்த கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, தற்போது நிலவும் கோடை காலத்தைப் பயன்படுத்தி, போா்க்கால அடிப்படையில், கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை பலப்படுத்தி, தாா்ச்சலையை முழுமையாக செப்பனிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com