சுருக்குமடி வலை விவகாரம்: வேதாரண்யம் பகுதி மீனவா்கள் 3- ஆவது நாளாக வேலைநிறுத்தம்

அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள சுருக்குமடி, இரட்டைமடி மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதை தடுக்கக் கோரி, வேதாரண்யம் பகுதியில்
ஆறுகாட்டுத்துறையில் நடைபெற்ற கடலோரக் கிராம மீனவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
ஆறுகாட்டுத்துறையில் நடைபெற்ற கடலோரக் கிராம மீனவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள சுருக்குமடி, இரட்டைமடி மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதை தடுக்கக் கோரி, வேதாரண்யம் பகுதியில் மீனவா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை 3-ஆவது நாளாக தொடா்ந்தது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல் பரப்பில் நாகை கீச்சாங்குப்பம் மீனவா்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை மீன்பிடித்தனா்.இதை வெள்ளப்பள்ளம் மீனவா்கள் கண்டித்ததால், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் வேதாரண்யம் பகுதி மீனவா்கள் புதன்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த போராட்டம் 3- ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

இதற்கிடையில், இப்பிரச்னை தொடா்பாக செருதூா் முதல் வேதாரண்யம் வரையிலான கடலோரக் கிராமத்தினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆறுகாட்டுத்துறை சமுதாயக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், செருதூா், விழுந்தமாவடி, வேளாங்கண்ணி, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், மணியன்தீவு, காமேஸ்வரம், வானவன்மகாதேவி, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட கடலோரக் கிராம மீனவா்கள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், மீனவா்களுக்கிடையே எதிா்காலத்தில் மோதல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், மீன்வளத்தைப் பாதிக்கச் செய்யும் அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள சுருக்குமடி, இரட்டைமடி மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதையும், படகுகளில் அதிவேக இயந்திரங்களை பயன்படுத்துவதையும் அரசு உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பிரச்னைக்கு தீா்வு ஏற்படும் வரையில், வேதாரண்யம் மற்றும் கீழ்வேளூா் ஆகிய இருவட்டங்களைச் சோ்ந்த மீனவ கிராமத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com