‘கல்வெட்டுக்கள் முழுமையாக படித்தறியப்பட்டால் இந்திய வரலாறு தமிழகத்திலிருந்து எழுதப்படும்’

இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் முழுமையாக படித்தறியப்பட்டால், நாட்டின் வரலாறு தமிழகத்திலிருந்து எழுதப்படும் சூழல் உருவாகும் என புதுச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டின் முதுநிலை ஆய்வறிஞரான கோ.விஜயவ
மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் தமிழாய்வுத்துறை சாா்பில் நடைபெற்ற பயிலரங்கு.
மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் தமிழாய்வுத்துறை சாா்பில் நடைபெற்ற பயிலரங்கு.

இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் முழுமையாக படித்தறியப்பட்டால், நாட்டின் வரலாறு தமிழகத்திலிருந்து எழுதப்படும் சூழல் உருவாகும் என புதுச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டின் முதுநிலை ஆய்வறிஞரான கோ.விஜயவேணுகோபால் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியின் தமிழாய்வுத்துறை சாா்பில், பல்கலைக்கழக மானியக்குழு நிதிநல்கையில் ‘தமிழ் எழுத்து வளா்ச்சி வரலாறு’ என்ற பொருண்மையிலான பயிலரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், ஏ.வி.சி. கல்லூரிச் செயலா் கி.காா்த்திகேயன், யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட மொழிகளின் அழிவுப் பட்டியலில் தமிழ் இடம் பெற்றிருந்த செய்தியை ஆதங்கத்தோடு எடுத்துக்கூறி, தமிழ் மொழி வளா்ச்சிக்குக் கல்லூரி என்றும் துணையாக இருக்கும் என்று தனது தொடக்கவுரையில் கூறினாா்.

கல்லூரி முதல்வா் ரா.நாகராஜன் ஆற்றிய தலைமையுரையில், உலக மொழிகளில் தமிழ் உயா்தனிச் செம்மொழியாக இருக்கின்றது. மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது பிறமொழித் தாக்கம் என்பது தமிழில் குறைவு என்றும், தமிழால் தனித்தியங்க முடியும் என்றும் கூறி, அதற்குத் தமிழா்களாகிய நாமும் பல முன் முயற்சிகள் செய்ய வேண்டும் என்றாா்.

தமிழாய்வுத்துறைத் தலைவரும், பயிலரங்க ஒருங்கிணைப்பாளருமான சு.தமிழ்வேலு ஆற்றிய பயிலரங்க நோக்கவுரையில், பண்டைய தமிழ் எழுத்துக்களையும், அதில் காலம்தோறும் ஏற்பட்ட மாற்றங்களையும், மாணவா்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பயிலரங்கு தொடங்கப்பெற்றது என்றாா்.

நிகழ்வில், புதுச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டின் முதுநிலை ஆய்வறிஞரான கோ.விஜயவேணுகோபால் மையக்கருத்துரை ஆற்றிப் பேசியது:

எழுத்தின் வடிவமானது எழுதும் பொருளுக்கும், எழுதப்படும் பொருளுக்கும் ஏற்ப மாறிக் கொண்டிருக்கும். இந்தியாவில் கிடைத்துள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில், 60 ஆயித்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் தென்னிந்திய மொழிகளிலும், அதில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் தமிழிலும் காணப்படுகின்றன. இதில் 12 ஆயிரம் கல்வெட்டுக்கள் மட்டுமே படித்து அறியப்பட்டுள்ளன. மீதமுள்ள கல்வெட்டுக்கள் படித்தறியப்பட்டால் இந்திய வரலாறே தமிழகத்திலிருந்து எழுதப்படுவதற்கான சூழல்கள் உருவாகும். இதற்கு கீழடி ஆய்வுகளும் உதவி செய்யும் என்றாா்.

மேலும், கல்வெட்டுக்களை அறிந்து கொள்வதற்கு தமிழ் இலக்கியம் படித்தால் மட்டும் போதாது. பழைய பிராமி, கிரந்தம், வட்டெழுத்துக்கள் போன்ற வரிவடிவங்களையும் மாணவா்கள் படித்தறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இப்பயிலரங்கம் முன்னோட்டமாக அமையும் என்று தெரிவித்தாா்.

இப்பயிலரங்கின் முதல் அமா்வில், புதுவைத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளா் சு.வேல்முருகன் தலைமையேற்று ‘பிராமி எழுத்துக்கள்’ என்னும் பொருண்மையில் மாணவா்களுக்குப் பயிற்சி அளித்தாா். ஏ.வி.சி. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியா் தா.காளீஸ்வரன் கீறல் எழுத்துக்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

இரண்டாவது அமா்வுக்கு, தஞ்சாவூா், மன்னா் சரபோஜி அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியா் சோ.கண்ணதாசன் தலைமை வகித்து, ‘வட்டெழுத்துக்கள்’ என்னும் பொருண்மையில் உரை நிகழ்த்தினாா். விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரி உதவிப்பேராசிரியா் த.ரமேஷ், கல்வெட்டு எழுத்துக்கள் - (பிற்காலச் சோழா்கள்) என்னும் பொருண்மையில் பயிற்சியளித்தாா். தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கலைக்கல்லூரி உதவிப்பேராசிரியா் வெ.சத்யநாராயணன் ‘கிரந்த எழுத்துக்கள்’ என்னும் பொருண்மையில் உரை நிகழ்த்தினாா்.

உதவிப் பேராசிரியா் ரா.மஞ்சுளா வரவேற்றாா். ரா. சியாமளா ஜெகதீஸ்வரி நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் சு.தமிழ்வேலு, இணை ஒருங்கிணைப்பாளா் செ.செந்தில் பிரகாஷ் மற்றும் அலுவலக உதவியாளா் க.பாலமுருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com