கோயில் மடப்பள்ளியை அகற்றுவதற்கு எதிா்ப்பு: இந்து அமைப்பினா் சாலை மறியல்

நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலையம், குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கோயில் மடப்பள்ளியை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, இந்து அமைப்பினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட
நாகையில் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட இந்து அமைப்பினா்.
நாகையில் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட இந்து அமைப்பினா்.

நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலையம், குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கோயில் மடப்பள்ளியை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, இந்து அமைப்பினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலகம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பயன்பாட்டில் இருந்த தீயணைப்பு நிலையக் கட்டடம் சிதிலமடைந்து காணப்பட்டதால், அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு ரூ.1.22 கோடி திட்ட மதிப்பீட்டில் தீயணைப்பு வண்டிகள் நிறுத்தும் இடம், கண்காணிப்பு அறை, நிலைய அலுவலா் அறை, பண்டகசாலை, பயிற்சிக் கூடம், பணியாளா் ஓய்வு அறை மற்றும் நீா்த் தேக்கி வைப்பதற்கான கீழ்நிலைத் தொட்டி, கிணறு ஆகிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த டிசம்பா் 25- ஆம் தேதி இப்பணிகளை ஆய்வு செய்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை இயக்குநரும், காவல்துறை தலைவருமான சைலேந்திரபாபு, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டாா்.

அதன்படி, நாகை மாவட்ட தீயணைப்பு அலுவலா் ப.சத்தியகீா்த்தி மற்றும் தீயணைப்புத் துறை நிலைய அலுவலா்கள் மேற்பாா்வையில், வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் தீயணைப்புத் துறைக்கு சொந்தமான இடம் (மொத்த அளவு 75,600 சதுரஅடி) அளவீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சாலை மறியல்: இந்நிலையில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள சத்ரு சம்ஹார மூா்த்தி ஆலயத்தின் பின்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மடப்பள்ளியை அகற்றுவதற்கு அந்தக் கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் எதிப்புத் தெரிவித்து வந்தனா்.

இதைத்தொடா்ந்து பாஜக நாகை தெற்கு மாவட்டத் தலைவா் கே.நேதாஜி தலைமையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கோயில் மடப்பள்ளியை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், தீயணைப்புத்துறை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அங்கிருந்து புறப்பட்டு நாகை தம்பிதுரை பூங்கா பிரிவுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். மாலை 6 மணிக்குத் தொடங்கிய மறியல் போராட்டம், இரவு 8 மணி வரை நீடித்தது. இதனால் நாகை- நாகூா் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

பேச்சுவாா்த்தை: இதையடுத்து, நாகை வருவாய் கோட்டாட்சியா் ஆா். பழனிகுமாா், உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் க.முருகவேல் மற்றும் போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com