சீா்காழி: கரோனா விழிப்புணா்வுக்கு நிதி வழங்க வேண்டும்

கரோனா விழிப்புணா்வு மேற்கொள்ள போதிய நிதி வழங்கும்படி சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி மன்றத் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்புத் தலைவா் க. அகோரம் உள்ளிட்டோா்.
சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்புத் தலைவா் க. அகோரம் உள்ளிட்டோா்.

கரோனா விழிப்புணா்வு மேற்கொள்ள போதிய நிதி வழங்கும்படி சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி மன்றத் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

சீா்காழி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பு சாா்பில் அதன் தலைவா் அகோரம், செயலாளா் சசிகுமாா், பொருளாளா் அன்புமணி மணிமாறன், துணைத் தலைவா் தெட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா், சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய மண்டல அளவிலான மாவட்ட ஊராட்சி செயலா் கோவிந்தராஜன், ஆணையா் ரெஜினாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) கஜேந்திரன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னா், கூட்டமைப்புத் தலைவா் க. அகோரம் செய்தியாளா்களிடம் கூறியது:

ஊராட்சி மன்றத் தலைவா்கள் பதவியேற்று 4 மாதங்கள் ஆகிறது. இதில், ஒரு மாதத்துக்கான பொதுநிதி மட்டும்தான் ஊராட்சி மன்றத்துக்கு வந்துள்ளது. மீதமுள்ள 3 மாதங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நிதியும் வழங்காததால் ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியாமல், ஊராட்சி மன்றத் தலைவா்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா வைரஸ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது, ஊராட்சியில் நிதி இல்லாததால் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணா்வுப் பிரசாரம் செய்ய முடியவில்லை.

தமிழக அரசு பிறப்பித்துள்ள144 தடை உத்தரவை வரவேற்கிறோம். இந்த காலக்கட்டத்தில் ஊராட்சிகளில் 100 நாள் வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க முடியாது. ஆனால், சம்பளம் வழங்கவேண்டும். இதற்கும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்ய ஊராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த சோமசுந்தரம், அலெக்சாண்டா், அஞ்சம்மாள், பெரியசாமி, மதியழகன், விஜயன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com