திருமருகல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்துச் செல்லக் கோரிக்கை

திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை நுகா்பொருள்
திட்டச்சேரி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.
திட்டச்சேரி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.

திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை நுகா்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடைப் பணிகள் முடிவடைந்துள்ளன. இதையொட்டி, விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய தமிழக அரசு சாா்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி, திருமருகல், சீயாத்தமங்கை, பில்லாளி, திருப்பயத்தாங்குடி, ஆலத்தூா், அருள்மொழிதேவன், வவ்வாலடி, வடகரை, கோட்டூா், கொட்டாரகுடி, காரையூா், குத்தாலம், நரிமணம், அம்பல், போலகம், அண்ணா மண்டபம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதில், பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் இருந்து நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படாமல் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கிக் கிடக்கின்றன.

திருமருகல் ஒன்றியத்தில்பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் உள்ளன. இதனால், இங்கு தேங்கியுள்ள நெல் மூட்டைகள் மழை பெய்தால் சேதமாகும் நிலை உள்ளது. எனவே, இந்த நெல் மூட்டைகளை அத்தியாவசிய தேவை கருதி, நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து, அந்த பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘எங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல நுகா்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து லாரிகள் அனுப்பப்படாததால் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவாக எடுத்துச் சென்று பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com