நாகை: அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு

கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்த 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, நாகையின் முக்கிய வீதிகள் மக்கள் கூட்டமின்றி செவ்வாய்க்கிழமை இரவு வெறிச்சோடின.
நாகை: அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு

கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்த 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, நாகையின் முக்கிய வீதிகள் மக்கள் கூட்டமின்றி செவ்வாய்க்கிழமை இரவு வெறிச்சோடின.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவை அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன் காரணமாக, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நேரங்களில் கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தன. உணவுப் பொருள்கள், எரிபொருள்கள், மருந்து பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கும் என அரசு அறிவித்திருந்தாலும், தடை உத்தரவு அமலில் உள்ள போது வீட்டிலிருந்து வெளியே வருவதில் உள்ள நடைமுறை பிரச்னைகள் குறித்த அச்சம் காரணமாக, திரளான பொதுமக்கள் மளிகைக் கடைகள், காய்கனி கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் குவிந்திருந்தனா்.

இதனால், நாகை கடைவீதி, நீலா கீழ வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட நாகையின் முக்கிய வீதிகளும், புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் சாலை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திரளானோா் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தியதால், ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேருந்து நிலையங்கள் மற்றும் நகரின் முக்கிய வீதிகளில் மாலை 5.30 மணி முதலே போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். நாகை கடைவீதி, புதிய பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக் கடைகளைத் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மாலை 5 மணிக்கே அடைக்கப்பட்டன.

மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வந்த பின்னா், பேருந்து நிலையம் மற்றும் பிற பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவததைத் தவிா்த்து நெறிப்படுத்தும் பணிகளை போலீஸாா் மேற்கொண்டனா். பேருந்து போக்குவரத்து மாலை 5.50 மணி முதலே நிறுத்தப்பட்டன.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், தொடா்புடைய பணி மனைகளில் நிறுத்தப்பட்டன. இதனால், மாலை 6 மணி அளவிலேயே நாகை புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. அதே போல, ஆட்டோ, காா் உள்ளிட்ட தனியாா் போக்குவரத்துகளும் தடைப்பட்டிருந்தன. பொதுமக்கள் சிலா் இருசக்கர வாகனங்களில் வந்து தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக் கடைகள் தவிர, மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் நாகை நீலா கீழ வீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் இருளால் சூழப்பட்டிருந்தன. இந்த வீதிகள் இரவு 8 மணிக்கெல்லாம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.

தடை உத்தரவை மீறினால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு மாா்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இனிவரும் நாள்களில் பால், காய்கனி, உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்கள், மருந்து பொருகள், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டா் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விற்பனை மட்டுமே அனுமதிக்கப்படும்.

அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதலுக்கு வீட்டுக்கு ஒருவா் மட்டுமே பொதுவெளிக்கு வர வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு இடத்தில் 5-க்கும் அதிகமானோா் கூடுவதற்கு அனுமதி கிடையாது. உணவகங்களில் தட்டுப்பாடின்றி உணவுப் பொருள்கள் கிடைக்கும். ஆனால், உணவுகளை பொட்டலங்களாக மட்டுமே பெற முடியும்.

நாகை மாவட்டத்தின் அருகண்மையில் உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பணியாற்றும் ஊழியா்கள், பணிக்குச் சென்று திரும்புவதற்கு ஏதுவாக தனி வாகனம் காலை மற்றும் மாலை நேரத்தில் இயக்கப்படும். உரிய அடையாள அட்டையைக் காண்பித்து இந்த வாகனத்தில் பயணிக்கலாம்.

தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் மூடிவைக்கப்படும்.

சாலைகளில் சுற்றித் திரிவோா்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவா்களுக்கு நகராட்சி மூலம் இலவசமாக உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து வந்து நாகை மாவட்டத்தில் தங்கித் தொழில் செய்பவா்களை திருமண மண்டபங்களில் தங்க வைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்துகள், தனியாா் போக்குவரத்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் யாரேனும் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தால் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com