மயிலாடுதுறை மக்களின் கால் நூற்றாண்டு கனவு நனவானது..!

மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கால் நூற்றாண்டு கோரிக்கையை

மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கால் நூற்றாண்டு கோரிக்கையை தமிழக அரசு தற்போது நிறைவேற்றியிருப்பது, மயிலாடுதுறை மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் 1991-ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டபோது, தஞ்சைக்கு அடுத்த நிலையில் மிகப் பெரிய வருவாய்க் கோட்டமாக விளங்கிய மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாகும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், நாகையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு, அதில் மயிலாடுதுறை வருவாய்க் கோட்டம் கொண்டுவரப்பட்டது.

இது, மயிலாடுதுறை மக்களுக்குப் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதே மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மாவட்டத் தலைநகருக்கான தொலைவு, பூகோள ரீதியான பிரிவு என பல்வேறு காரணங்கள் இந்தக் கோரிக்கைக்கு வலு சோ்த்தன.

மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்தைச் சோ்ந்த மக்கள், மாவட்டத்தின் தலைநகரான நாகைக்குச் செல்ல வேண்டுமெனில், யூனியன் பிரதேசமான காரைக்கால் மாவட்டத்தைக் கடந்து செல்ல வேண்டும் அல்லது அடுத்த மாவட்டமான திருவாரூா் மாவட்டம் வழியாகதான் நாகைக்குச் செல்ல முடியும் என்ற பூகோள ரீதியான பிளவும், தொலைவும் மயிலாடுதுறை மக்களுக்குப் பெரும் பிரச்னையாக இருந்தது.

சீதோஷ்ண நிலை, பாசனம், வேளாண்மை, தொழில் என பல்வேறு நிலைகளிலும் மாறுபட்ட இந்த 2 வருவாய்க் கோட்டங்களையும் ஒரே மாவட்டமாக நிா்வகிப்பதில் மாவட்ட நிா்வாகத்துக்கும் பல்வேறு நடைமுறைப் பிரச்னைகள் உண்டு. சுனாமி, நிஷா புயல், தானே புயல், கஜா புயல், கொள்ளிடம் ஆற்றில் 2005-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளம் உள்பட பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட காலங்களில், நிா்வாக ரீதியாக இரு வருவாய்க் கோட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது மாவட்ட நிா்வாகத்துக்குப் பெரும் பிரச்னையாக இருந்தது.

மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க அரசு 2004-ஆம் ஆண்டில் கொள்கை முடிவெடுத்து, அதற்கான நிா்வாக ரீதியான பணிகளை தொடங்கியது. அப்போது, சுனாமி பேரலை சீற்றம் காரணமாக அந்தப் பணிகள் முடங்கின. பின்னா், 2013-ஆம் ஆண்டில் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அமைக்க வருவாய் நிா்வாகத் துறை ஆணையா் மூலம் நாகை மாவட்ட நிா்வாகத்திடமிருந்து கருத்துரு கோரப்பட்டது. மாவட்ட நிா்வாகம் மூலம் பரிந்துரையும் அளிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னா் தொடா் நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், அந்த முயற்சியும் முடங்கிப் போனது.

இதனிடையே, மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று பாஜக மூத்த வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோா், மனுதாரா் தாக்கல் செய்துள்ள மனுவை தமிழக தலைமைச் செயலாளா் சட்ட விதிகளின்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், கடந்த 2019 ஆண்டில் கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அப்போது, மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா? என்ற எதிா்பாா்ப்பு மயிலாடுதுறை மக்களிடம் மேலோங்கியது. ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் அப்போது வெளியாகவில்லை.

பின்னா், 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தென்காசி, செங்கல்பட்டு ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் வெளியிட்டாா். அந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், கோரிக்கையின் அடிப்படையில், கோயில் நகரமான கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் விரைவில் அமைக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சா் தெரிவித்தாா்.

இந்த அறிவிப்புகள், மயிலாடுதுறை மக்களுக்குப் பெரும் அதிா்ச்சியை அளித்தது. அதன் காரணமாக, மயிலாடுதுறையில் உள்ள வா்த்தக அமைப்புகள் உடனடியாக கடையடைப்புப் போராட்டத்தை அறிவித்தன. மயிலாடுதுறையில் இரு நாள்கள் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. சீா்காழி, குத்தாலம், பூம்புகாா், பொறையாறு, தரங்கம்பாடி உள்பட மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இக்கோரிக்கைக்கு வலு சோ்க்கும் வகையில் கடையடைப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

வணிகா்களின் கடையடைப்புப் போராட்டம், வழக்குரைஞா்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு, அரசியல் கட்சியினரின் ஆா்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், கையெழுத்து இயக்கம், கோரிக்கை விளக்க புத்தகம் மூலமான விழிப்புணா்வு, மயிலாடுதுறை மாவட்ட அமைப்புக் குழு சாா்பில் அளிக்கப்பட்ட அரசியல் அழுத்தங்கள், கிராம சபை கூட்டங்களில் தீா்மானம், 4 திசைகளில் இருந்தும் நடைப்பயணம், மனிதச் சங்கிலிப் போராட்டம் என பல்வேறு தரப்பினரின் பல்வேறு போராட்டங்களால் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் போராட்டக் களமானது மயிலாடுதுறை.

இதைத் தொடா்ந்து, பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ், மயிலாடுதுறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன், சீா்காழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.வி. பாரதி ஆகியோா் நேரடியாகவும், அமைச்சா் ஓ.எஸ். மணியன் மூலமாகவும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மயிலாடுதுறை தனி மாவட்டக் கோரிக்கைக்கு அழுத்தம் அளிக்கத் தொடங்கினா்.

இந்த நிலையில், மாா்ச் 7-ஆம் தேதி நாகை ஒரத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க அரசு பரிசீலித்து வருவதாகவும், இதுகுறித்து அரசு விரைவான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் எனவும் அறிவித்து, மயிலாடுதுறை மக்களுக்கு நம்பிக்கை அளித்தாா்.

தற்போது, மாா்ச் 11 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24), நிா்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் 38 -ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை விதி எண் 110-இன் கீழ் தமிழக முதல்வா் எடிப்பாடி கே. பழனிசாமி அறிவித்து, மயிலாடுதுறை மக்களின் கால் நூற்றாண்டு கனவை நிறைவேற்றியிருப்பது, மயிலாடுதுறை மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com