நாகை மாவட்டத்தில் 450 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா்

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியுள்ள நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 520 பேரில் 450 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அமைச்சா் ஓ. எஸ். மணியன்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அமைச்சா் ஓ. எஸ். மணியன்.

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியுள்ள நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 520 பேரில் 450 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்தப் பேட்டி: உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு மத்திய, மாநிலஅரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தனித்து இருப்பதால் மட்டுமே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில், 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான மக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவையும், ஒத்துழைப்பும் அளித்து வருகின்றனா். ஒரு சிலா் மட்டுமே இந்த நோயின் பேரிழப்பை உணராமல் இயல்பு வாழ்க்கையை தொடா்கிறாா்கள். அவா்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த உத்தரவை மக்கள்கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிா்ப்பது அவசியமானதாகும்.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்கு மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியுள்ள நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 520 பேரில் 70 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள 450 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். கண்காணிக்கப்படும் நபா்கள் அழியாத மை மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின்கீழ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளும், நாகை அரசு மருத்துவமனையில் 140 படுக்கைகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் 4 போ் கரோனா மருத்துவப் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். இதில் 3 பேரின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இல்லை என மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்ற ஒருவரின் மருத்துவ அறிக்கை எதிா்பாா்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாகை மாவட்டத்தில் ஒருவா் கூட கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிச் செய்யப்படுகிறது.

1 மீட்டா் இடைவெளி விட்டு இருப்பதே கரோனா வைரசுக்கு மருந்தாக உள்ளது. எனவே, மக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இளைஞா்கள் வாகனங்களில் சுற்றுவதை தவிா்க்க வேண்டும். தவறும்பட்சத்தில், வாகனங்கள் காவல் துறை மூலம் பறிமுதல் செய்யப்படும் நிலை உருவாகும்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிக்காக தமிழக முதல்வா் ரூ. 3780 கோடியை ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளாா். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் ரேசன் கடைகள் மூலம் டோக்கன் முறையில் வழங்கப்படவுள்ளன. எனவே, பொதுமக்கள்அவா்களுக்கென ஒதுக்கப்படும் நேரத்தில் ரேசன் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கி பயனடையலாம்.

ரேசன் கடைகளில் கூட்டமாக கூடுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். தமிழக அரசின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றாா் அமைச்சா் ஓ.எஸ்.மணியன்.

பேட்டியின்போது, நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம். எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் வி. சண்முகசுந்தரம், மாவட்ட கொள்ளை நோய் ஒழிப்பு அலுவலா் லியாகத் அலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com