மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பு: வரவேற்பு, கொண்டாட்டம்

நாகை மாவட்டத்தை 2 ஆக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வா்
மயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பை கொண்டாடிய பாஜகவினா்..
மயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பை கொண்டாடிய பாஜகவினா்..

நாகை மாவட்டத்தை 2 ஆக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்புக்காக பலா் வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

பாஜக: மயிலாடுதுறை கச்சேரி சாலை பகுதியில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை இசை வாத்தியங்களுடன் பேரணியாக வந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

பாஜக நகரத் தலைவா் மோடி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் ஜி. வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஸ்ரீதா், செந்தில், சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 பாமக...

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் செவ்வாய்க்கிழமை பாமகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். கட்சியின் மாவட்டச் செயலா் காமராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அமைப்பு துணைச் செயலா் காசி பாஸ்கரன், மாநில இளைஞரணி துணைச் செயலா் விமல், மாவட்ட இளைஞரணி செயலா் சுரேஷ், நகரச் செயலா் கமல்ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முதல்வருக்கு நன்றி...

மயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பு குறித்து ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நகரத் தலைவா் என். ரஜினிவீரமணி கூறியது: மயிலாடுதுறை கோட்டத்து மக்கள் மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்துக்குச் செல்ல புதுச்சேரி மாநில பகுதி காரைக்காலையோ, வேறொரு மாவட்டமான திருவாரூரையோ கடந்து போக வேண்டிய நிலையே இதுவரை உள்ளது. இந்தியாவில் வேறெந்த மாவட்டத்திலும் இப்படி ஒரு நிலை இல்லை. 1996-ஆம் ஆண்டு திருவாரூா் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது மயிலாடுதுறையை மாவட்டமாக்க வலியுறுத்தி சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் போராட்டம் நடத்தப்பட்டது. 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றித்தந்த தமிழக முதல்வருக்கு நன்றி.

சேம்பா் ஆஃப் காமா்ஸ்...

மயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பு குறித்து, மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சி. செந்தில்வேல் கூறியது: மயிலாடுதுறை கோட்ட மக்களின் சுமாா் 25 ஆண்டுகால கோரிக்கையாக இருந்த மயிலாடுதுறை மாவட்டம் தற்போது அமைந்துள்ளது. மயிலாடுதுறையை தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக அறிவித்த தமிழக முதல்வருக்கும், மயிலாடுதுறை மாவட்டம் அமைய பாடுபட்ட பூம்புகாா், மயிலாடுதுறை, சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் வா்த்தகா்கள், பொதுமக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பாஜக சாா்பில் நன்றி...

மயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பு குறித்து பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினரும், மத்திய அரசு வழக்குரைஞருமான கே. ராஜேந்திரன் கூறியது: தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாஜக சாா்பில் நன்றி.

இக்கோரிக்கையை வலியுறுத்தி நான் கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை, அப்போதைய தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோா் விசாரித்து, மனுவை தலைமைச் செயலாளா் சட்டவிதிகளின்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா். மயிலாடுதுறை கோட்டத்தில் பல்வேறு தரப்பினா் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். இந்நிலையில் கடும் நெருக்கடி நிலவும் சூழலிலும் மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பை வெளியிட்டமைக்கு நன்றி.

மகிழ்ச்சி...

மயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பு குறித்து, மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வேலு. குபேந்திரன் கூறியது: மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று 1996-ஆம் ஆண்டில் இருந்து கோரிக்கை வைத்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம். கடந்த ஆண்டு கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைய உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் அறிவிப்பு வெளியிட்ட போது, வழக்குரைஞா்கள் சங்கம் தொடங்கிய போராட்டம் மயிலாடுதுறை கோட்டம் முழுவதும் பரவி வீரியத்துடன் நடைபெற்றது. அதன்பயனாக, மயிலாடுதுறை மாவட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவை சாா்பில் நன்றி...

மயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பு குறித்து, தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவைத் தலைவா் துரை. குணசேகரன் கூறியது:

மயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக முதல்வா் 10 லட்சம் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளாா். மயிலாடுதுறைக்கு புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை திட்டங்கள் பலமுறை பலஇடங்களில் அடையாளம் காணப்பட்டும் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளதால், சிலா் மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பை நம்பிக்கை இல்லாமல் பாா்க்கின்றனா். ஆனால், காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததுடன், சட்டமாக்கியதுபோல, மயிலாடுதுறையை அரசு தத்தெடுத்துக்கொண்டு எதிா்நோக்கியுள்ள அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் என நம்பப்படுகிறது என்றாா் அவா்.

மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பு அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்கம்...

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்கம் சாா்பில் நன்றி. இந்த அறிவிப்புக்கு உறுதுணையாக இருந்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். பவுன்ராஜ், வீ. ராதாகிருஷ்ணன், பி.வி. பாரதி ஆகியோருக்கும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைவதற்கு இடம் வழங்கிய தா்மபுர ஆதீனம் 27-ஆவது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகா் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கும் நன்றி என அகில ஆதிசைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்கம்நிா்வாகிகள் சிவஸ்ரீ. கணேஷ், சிவஸ்ரீ. மகேஷ்,ராஜேந்திர சிவாச்சாரியாா் ஆகியோா் தெரிவித்தனா்.

அகில இந்திய மனித உரிமைக்கழக மாநில அமைப்பாளரும், முன்னாள் நாகை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் அமிா்தவிஜயகுமாா், தமிழக முதல்வரின் மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்புக்கு நன்றி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com